சுவடி தரும் ஸ்வாரஸ்யம்




பழமையான காகிதச்சுவடிகளிலிருந்து படியெடுத்து ஆங்கில மொழிபெயர்ப்புடன் 2013ல் வெளியிடப்பட்ட இரு சம்ஸ்க்ருத யோகநூல்கள் பற்றிய சிறு குறிப்பு.
யோகம் என்பது தற்போது உலகோர் அனைவரால் அறியப்படும் ஒரு சொல்லாக விளங்குகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பதஞ்ஜலி முனிவரால் வகுத்தளிக்கப்பட்ட இந்த வாழ்வியல் நெறி, உடல் மனம் ஆகியவற்றின் ஆரோகியத்தைப் பேண ஒப்பற்ற வழிகாட்டியாகத் திகழ்கிறது.

அஷ்டாங்கயோகநிரூபணம்
யமம்,நியமம், ஆஸனம், ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணா, த்யானம், சமாதி என எட்டு அங்கங்களை வகுத்து அஷ்டாங்கயோகமாக நமக்களித்தார் பதஞ்ஜலி முனிவர். இந்த அஷ்டாங்கயோகதைத் தனது அனுபவத்தின் அடிப்படையில் ஐம்பத்தியொன்று சம்ஸ்க்ருத ஸ்லோகங்களாக தொகுத்து "அஷ்டாங்கயோகநிரூபணம்" என்று ஒரு சிறு சம்ஸ்க்ருத நூலாக சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் புனைந்துள்ளார், பெயர் அறியப்படாத ஒரு யோக அறிஞர். அடையாறு ஓலைசுவடி நூலகத்தில் இந்தச் சுவடி பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த நூலின் ஐந்து  சிறப்பம்சங்களை மட்டும் பார்போம் -

1) பகவத்கீதை, யோகயாஜ்ஞவல்க்யம், ஹடயோகப்ரதீபிகை ஆகிய பண்டைய யோக நூல்களில் முதலில் யோகத்தை போதித்தவர்கள், விஷ்ணு, ப்ரஹ்மா அல்லது சிவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த நூலில் முதன்முறையாக நாரதர், சனத்குமாரர், வ்யாஸர் ஆகியோரே யோகத்தின் ஆதிபுருஷர்களாக கூறப்படுகிறார்கள் (ஸ்லோகம் 8,9). ஆக மனிதர்களுள் சிறந்தவர்களான முனிவர்கள், சக மனிதர்கள் உய்ய கண்டளித்தது தான் யோகம் எனும் உயரிய கருத்து இந்த நூலிலிருந்து புலனாகிறது.
.
2) "யோகப் பயிற்சி நம்பிக்கை அளிக்கவல்லது" (ஆஸ்திக்ய ஸித்தயே ந்ரூணாம் - ஸ்லோகம் 3) எனக் குறிப்பிடுகிறது இந்நூல். நாத்திகமும், அவநம்பிக்கையும், சந்தேகமும் அதனால் ஏற்படும் இடர்களும்,துன்பங்களும் மலிந்திருக்கும் இந்த காலகட்டத்தில் யோகம் நம்பிக்கை ஊட்டி இத்துன்பப்பிணியை போக்கும் அருமருந்து என இதனால் தெளிவாகிறது.

3) இந்நூலின் குறிப்பிடத்தக்க மற்றொரு கருத்து - "முதலில், மக்கள் அவர்கள் விரும்பும் பலன்களை அடைய யோகம் உதவும் .பின்னர் படிப்படியாக இதன் உன்னதமான நெறிமுறைகளால் மக்கள் (ஆன்ம) ஞானவேள்வியில் ஈடுபடுவார்கள்" (ஆதௌ இஷ்டார்த்தஸித்யர்த்தவினியோகாதிக: க்ரம: ததோ ஜ்ஞானாத்மிகா சேஷ்டி:... ஸ்லோகம் 13, 14) உடல்-மன-ஆரோக்கியத்தை காப்பாற்றிக்கொடுப்பதோடு மட்டுமல்லாமல்,யோகம் மனிதனை மகோன்னதமான நிலைக்கும் இட்டுச்செல்லவல்ல ஒரு நெறி எனும் அனுபவப்பூர்வமான உண்மை தெளிவாக இந்த நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

4) கட்டுதிட்டமில்லா வாழ்க்கை வாழும் மனிதர்களில் ப்ராணன் உடலைச்சுற்றி பன்னிரெண்டு அங்குலம் வரை பரவி பலமிழந்து போய்விடுகிறது என யோகயாஜ்ஞவல்க்யம் எனும் புராதனமான யோக நூல் குறிப்பிடுகிறது. இக்கருத்து இந்த நூலிலும் வலியுறுத்தப்படுகிறது. மேலும், நோய்களுக்கு மூல காரணம் இப்படி ப்ராணன் வலுவிழந்து இருப்பது தான். "ஆகையால் (முறையாக) "ப்ராணாயாமப் பயிற்சி செய்து முதலில் ப்ராணனை உடலுக்கு அருகாமையில் கொண்டு வர வேண்டும். இதற்கு அடுத்த கட்டமாக தொடர்ந்து முயன்று ப்ராணனை உடலுக்கு உள்ளேயே அடக்கிவிட்டால் மனித உடல் வைரம் பாய்ந்தது போல உறுதியாகி விடும். இதனால் நீண்ட ஆயுளையும் பெறலாம்" என்று ஒரு அபூர்வமான யோகமுறையைத் தெரிவிக்கிறது இந்த நூல். (சரீராத் அதிகம் வாயும் த்வாதசாங்குலமானகம்..., எவம் அப்யாஸயோகேன வஜ்ரகாயோ பவேத்... ஸ்லோகம் 43, 44)

5) நிறைவாக, ப்ராணாயாமம் பற்றி மற்றுமொரு புதிய தகவல் இந்த நூலில் காணக்கிடைக்கிறது. பொதுவாக ப்ராணாயாமம் என்றால் கைவிரகளால் மூக்கைப் பிடித்துகொள்ளுதல் என்று தான் புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால், "கையை (விரல்களை) உபயோகிக்காமல் ப்ராணாயாமப் பயிற்சி செய்தல் வேண்டும்" என்கிறது இந்த நூல். (விநா ஹஸ்தேன குர்வீத வாயோர்தாரணம் ஆத்மனி, ஸ்லோகம் 42) அதாவது, கைவிரல்களை உபயோகித்து ஆரம்பத்தில் ப்ராணாயாமம் செய்தாலும்,படிப்படியாக அந்த நிலையைக் கடந்து, மனதாலேயே ப்ராணனை நெறிப்படுத்தும் உயர் நிலைக்கு நாம் செல்ல வேண்டும் என்பது இதன் உட்பொருள் எனக்கொளலாம். வெளிப்புறச்செயல்களை விட உள்ளார்ந்த செயல்களுக்கு பலமும், பலனும் அதிகம் தானே!

இது, தனது பெயரைக் கூட உலகிற்கு அறிவிக்க விரும்பாத தன்னலமற்ற யோகி ஒருவர் நமக்கு விட்டுச்சென்ற விலைமதிப்பற்ற ஞானப் பொக்கிஷமான, அஷ்டாங்கயோகநிரூபணம் எனும் நூல் பற்றிய சிறு குறிப்பு.                           

இனி-
நாதானுஸந்தான-பஞ்சகம்
பஞ்ச என்றாக் ஐந்து. நாதானுஸந்தானம் பற்றிய ஐந்து சம்ஸ்க்ருத ஸ்லோகங்களை உள்ளடக்கிய, குறு நூல் தான் நாதானுஸந்தான-பஞ்சகம். க்ரந்த எழுத்துக்களில் எழுதப்பட்ட இது, சென்னை அரசினர் ஓலைசுவடி நூலகத்தில், பழமையான காகிதச்சுவடிக் கட்டு ஒன்றில் உள்ளது. இதை எழுதியவர் யார், அவரது காலம் என்ன ஆகியவை பற்றி குறிப்பேதும் கிடைக்கவில்லை.

நாதம் என்பது ஒலி. குறிப்பிட்ட சில ஒலிகளில் மனதைச்செலுத்தத் துவங்கி,கடைசியில் ஒலிகளற்ற அமைதியான மோன நிலையை எய்த வழிவகுக்கும் பயிற்சி தான் நாதானுஸந்தானம். இந்தப் பயிற்சி ஹடயோகப்ரதீபிகை எனும் புராதனமான யோக நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

ஆதிசங்கரர் எழுதியதாகக் கருதப்படும் யோகதாராவளீ, ப்ரபோதஸுதாகரம் ஆகிய நூல்களிலும் கூட இது பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.

வீணை இசை, ம்ருதங்க நாதம், புல்லாங்க்குழல் ஒலி, மேகங்களின் கர்ஜனை ஆகியவை போன்ற நாதங்கள் "ஆஹதநாதம்" (உராய்வினால் ஏற்படும் ஒலி) எனப்படுகிறது. இவ்வொலிகளில் லயித்து இருத்தல் அனைவரும் அறிந்ததே. ஆனால், வெளியே இவ்வொலிகள் இல்லை எனினும் (குருவின் வழிகாட்டுதலுடன்) மனதால் இந்த நாதங்களை உணர்ந்திட முற்பட வேண்டும்.  இப்படிச் செய்து வந்தால் "அநாஹத-நாதத்தை" (உராய்வுகளால் ஏற்படாத உள் ஒலி), அதாவது ஆன்ம ஒலியைக் கேட்கலாம்.  இவ்வொலியில் நீண்ட காலம் லயித்திருத்தல் ஆன்ம ஞானத்தை ஏற்படுத்தும். இது நாதானுஸந்தானம். இதைப் பற்றி சுருக்கமாக நினைவுபடுத்துகிறது இந்த நூல்.அது மட்டுமல்லாமல் -   

"ஆன்மாவைப் பற்றி அரை நொடியேனும் சிந்தித்தால் வலது செவியில் அநாஹத நாதம் கேட்கும்" என்று நாதானுஸந்தானம் பற்றிய புது வழிமுறையையும் புலப்படுத்துகிறார் இந்நூலாசிரியர். (...க்ஷணார்த்தம் வா ஸ்வரூபபரிசிந்தனம் க்ரியதே....தக்ஷிணகர்ணே த்வனாஹத: ச்ரூயதே நாத:.. ஸ்லோகம் 1)

மேலும்"வெளிப்புற இசையில் ஈடுபடும் மனது தேனினும் இனிய ,அகண்டமான (ஆன்மநாதத்தில்) ஈடுபடாதா என்ன?" (ஆஹதநாதே மன: ரமதே... கிம் புன: மதுமதுரே அகண்டிதே ஸப்தே ஸ்லோகம் 4) எனும் வினாவை எழுப்பி இப்பயிற்சியில் ஈடுபடத்தூண்டுகிறது இந்த நூல்.

நிறைவாக, "ஒலியின் உள்ளே ஒளி பிறக்கும்" எனும் சிந்தனையைத் தூண்டும் கருத்தும் இந்நூலில் உள்ளது. (நாதாப்யந்தரவ்ருத்தி ஜ்யோதி:... ஸ்லோகம் 5) முன்பு கூறிது போல, அநாஹத ஒலியில் மூழ்கித்திளைப்பவர்கள், ஆன்ம ஒளியைப் பெற்று பிறவிக்கடலைக் கடக்கலாம் என கோடிக்காட்டவும் செய்கிறது இந்த கடுகத்தனையான கா/சாரம் பொருந்திய யோக நூல்.

முனைவர் .ஜெயராமன், 
க்ருஷ்ணமாச்சார்ய யோக மந்திரம், சென்னை.

Comments

Popular posts from this blog

Academics in 2024| Prof M Jayaraman

Various names of Teachers in Sanskrit - Are these definitions in accordance to Sanskrit sources? - A clarification

A profound act of Reverence! -Samskrtam salutes Tamil.