எனக்கும் அருளிய குருதேவர்




நேற்று (28-02-2017) ஶ்ரீராமக்ருஷ்ணருடைய ஜயந்தி. என்னுடைய மகளை ஆழ்வார்பேட்டையில் அவளது  பள்ளியில் விட்டுவிட்டு மயிலை ராமக்ருஷ்ணமடத்தில் குருதேவரை வணங்கிவிட்டு அலுவலகத்துக்குச் செல்லலாம் என்று எண்ணினேன். இருசக்கர வாகனத்தை செலுத்தும் போது மனதில் அன்று காலை படித்த "எல்லா இறைவடிவங்களும் ஒன்று தான். உருவமும் அருவமும் அவனே தான்" என்ற குருதேவரின் அமுத மொழி ஒன்று ஒலித்துக்கொண்டிருந்தது. ஆனந்தமான மன நிலையுடன் மடத்திற்குள் நுழைந்தேன்.

இனிமையான பஜனையின் நாதம் மேலும் மனதை புனிதப்படுத்தியது. படிகள் ஏறி கோயிலுக்குள் நுழைந்தேன். குருதேவரின் அழகிய திருமேனியைக் காண விரும்பிய எனது கண்களுக்கு பெருத்த ஏமாற்றம்சந்நிதியின் கதவுகள் மூடியிருந்தன. மனம் துயரத்தில் ஆழ்ந்தது.

குருதேவ! உங்களது ஜயந்தியில் உங்களை தரிசிக்க வந்த எனக்கு உங்களைக் காட்டி அருள மனமில்லையா? நேரம் காலை ஒன்பதேகால். அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். சந்நிதி கதவுகள் திறக்க வெகு நேரமானால் அலுவலகத்திற்குத் தாமதமாகிவிடும். கடமையா? பக்தியா? என மனம் அலை பாய்ந்ததுகுருதேவரை தரிசிக்க முடியவில்லை, அன்னையையும், ஸ்வாமிஜியையுமாவது தரிசிப்போம் என்று தெய்வத்திருமூவரில் இருவரை தரிசித்தேன். "என்னை மனதால் நினை. அது போதும்" என்பது குருதேவரின் ஆணை போலும் என்று எண்ணி இரண்டு நிமிடம் அமர்ந்தேன். ’ரகுபதி ராகவ ராஜா ராம் பதித பாவன சீதாராம்என்ற பஜனைப் பாடல் முடிந்தது. ஆம் பதிதன் நான். தாழ்ந்தவன். அவகுணங்கள் நிறைந்தவன். வேண்டும் போது எனக்கு எப்படி குருதேவரின் தரிசனம் கிடைக்கும்? இவ்விதம் பலவாறாக துன்பத்தில் உழன்றது என் மனம்.

அடுத்தப் பாடல் எனக்காகவே பாடப்பட்டது போல இருந்தது. கன்னட பஜனைப் பாடல் அது - "எஷ்டு தின நின்ன பாகிலல்லி காதிருவே ஶ்ரீராமக்ருஷ்ணா..." (எத்தனை நாள் தான் உனது வாயிலில் நான் காத்துக்கொண்டு இருக்க வேண்டும் ஶ்ரீ ராமக்ருஷ்ணா). பாடியவர் குரலில் பக்தி உணர்வு மேலோங்கியிருந்து. மனம் அந்தப் பாடலில் லயித்தது. ஒரு சிறு ஆசையும் தோன்றியது. சரி. இந்தப் பாடல் முடிந்த பின்னாவது சந்நிதிக் கதவு திறக்குமா? கன்னடப் பாடல் முடிந்தது. அடுத்தப் பாடலும் துவங்கியது. கண்கள் கடிகாரத்தை நோட்டமிட்டன. மணி ஒன்பதரையை நெருங்கிக் கொண்டிருந்தது. சந்நிதி கதவுகள் திறக்கவில்லை. எனக்கு பாக்கியம் அவ்வளவு தான். மாலையில் தான் வரவேண்டும் என்று ஏமாற்றத்துடன் படியிறங்கினேன். எனக்கு பக்தி உணர்வு போதாது என்று என்னையே நொந்து கொண்டு, கோயிலை ஒருமுறை வலம் வந்து கிளம்புவோம் என்று கோயிலை வலம் வரத் துவங்கினேன்.

முக்கால் பங்கு வலம் வந்த போது பேண்டு வாத்தியம் பெரிதாகக் கேட்டது. மடத்தின் பக்தர்களின் இனிமையான பஜனை ஒலியை அது பாதித்து. மடத்தின் எதிரில் உள்ள பள்ளி மாணவர்கள் இப்போது தான் பேண்டு பயிற்சி செய்ய வேண்டுமா? பள்ளி நிர்வாகத்திற்கு இது கூடவா தெரியாது இன்று குருதேவரின் ஜயந்தி என்று என மனதில் எண்ணிக் கொண்டேன். இவ்வாறு சி(நி)ந்தித்துக்கொண்டே கோயிலை நான் வலம் வந்து முடிப்பதற்கும் பள்ளி மாணவர்கள் மேளதாளத்துடனும், பேண்டு வாத்தியங்களுடனும் ஶ்ரீராமக்ருஷ்ணருடையை திருஉருவ வீதி உலாவினை முடித்துக்கொண்டு மடத்திற்குள் நுழைவதற்கும் சரியாக இருந்தது. புல்லரித்தது எனக்கு. "என்னை நீ தினசரி செய்வது போல கோயிலில் தரிசித்து விடலாம் என்று எண்ணினாயா? இன்று எனது ஜயந்தி. மேளதாளத்துடன் கோலகலமாக உனக்கு காட்சி அளிக்கிறேன்" என்பது குருதேவரின் விருப்பம் என உணர்ந்தேன். குருதேவருடைய கருணை அபாரமானது

குருதேவரின் ரதம் அருகே வந்தது. வாடிய எனது மனம் மலர்ந்தது. அங்கேயே விழுந்து வணங்கினேன். கோயிலிலும் மணி ஒலித்தது. படிகள் ஏறி ஓடினேன். இப்போது கதவுகள் திறந்திருந்தன. விமரிசையாக அலங்கரிக்கப்பட்ட குருதேவரின் திருவுருவக் காட்சி கண்டு மனம் பக்தியால் நிறைந்தது. முதலில் சிறிது துன்பத்தை அளித்து மனதை பக்குவப்படுத்தி அதன் பின் பேரானந்தத்தை வரி வழங்கிவிட்டேர்களே குருதேவஎன்னைப் போன்ற எளியவனுக்கும் உங்களைக் காட்டி அருளினீர்களே குருதேவ! உங்கள் மகிமையே மகிமை. மனநிறைவுடன் அலுவலகத்திற்குப் புறப்பட்டேன்.

Comments

Popular posts from this blog

Academics in 2024| Prof M Jayaraman

Various names of Teachers in Sanskrit - Are these definitions in accordance to Sanskrit sources? - A clarification

विश्वसंस्कृतसम्मेलने (WSC) संस्कृतविदुषां Hooliganism - यन्मम प्रत्यक्षं तत् भवतां समक्षम्।