துக்ளக்கில் என் கடிதம்
பிழையல்ல
10.5.2017 தேதியிட்ட துக்ளக்கில் பிழைதிருத்தம் என்பதாக வாசகர் கடிதம்
வெளிவந்துள்ளது. ’தர்மத்தின் சாரம்’ எனும் கட்டுரையில் இரண்டு பிழைகள்
உள்ளதாக வாசகர் கருத்து. முதல் பிழை எழுத்து தொடர்பானது. இரண்டாவது பிழை
அர்த்தம் தொடர்பானது. இந்த வாசகர் சுட்டிக்காட்டியுள்ள இரண்டு பிழைகளுமே
பிழைகள் அல்ல. கட்டுரையாளர் என்
சொந்தமோ பந்தமோ அல்ல. ஆயினும்,
இலக்கணவிதிகளின் படியும் வேத மரபின் படியும் எது சரி எது தவறு என்பது
எடுத்துக்கூறப்படவேண்டும் என்பதற்காக இந்தப் பதிவு.
ஸம்ஸ்க்ருத
இலக்கணப்படியும், வேத உச்சாரண மரபின் படியும் முதல் சொற்பிழை சொற்பிழையே
அல்ல. இரண்டாவது அர்த்தப் பிழை என்று சுட்டிக்காட்டப்படுள்ள விஷயம் ஏழு
நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்திருந்த சாயணாச்சாரியாரின் வேத உரைப்படி
அமைந்துள்ளதால் பிழை அல்ல.
1. தச்சம் யோ... என்று தான் இருக்க
வேண்டும். தச்சய்யோ என்பது தவறு என்கிறார் வாசகர் திரு ரங்காச்சாரி. ஆனால்
’ம்’ எனும் எழுத்து மகாரத்தைக் குறிக்கிறது. ஸம்ஸ்க்ருத இலக்கணப்படி
(மோSனுஸ்வார: 8.3.23 எனும் பாணினி ஸூத்ரப்படி)அங்கு நாசியினால்
உச்சரிக்கப்படும் அனுஸ்வாரம் இடம்பெறவேண்டும். தமிழில் அனுஸ்வாரத்தைக்
குறிக்கும் எழுத்து இல்லாதபடியால் ’ம்’ என்ற எழுத்தே பல வேத புத்தகங்களில்
பிரசுரிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் வாசகர் தச்சம் யோ என்று
இருக்கவேண்டும் என்கிறார்.
அனுஸ்வாரத்திற்கு பதிலாக அனுனாஸிகமான ’ய்’
எனும் எழுத்தும் இடம்பெறலாம் (வா பதாந்தஸ்ய 8.3.59 எனும்) பாணினி
ஸூத்ரப்படி. அதைத்தான் கட்டுரையார் கொடுத்துள்ளார் தச்சய்யோ என்பதாக.
இதிலும் கூட ’ய்’ என்பது நாசியினாலும் உச்சரிக்கப்படவேண்டும் என்பதைக்
குறிக்க தேவநாகரி வரிவடிவத்தில் ஒரு சந்த்ரபிந்து இடம் பெறும் य्ँ.
மிகச்சரியாக கொடுக்கப்பட வேண்டும் என்றால் ’தச்சய்ँயோ’ என்று இருக்க
வேண்டும். துக்ளக் என்பது ஆய்வுபத்திரிக்கை அல்ல. பொதுமக்கள் படிக்கும்
பத்திரிக்கை என்பதனால் தச்சய்யோ, சரியான உச்சரிப்புக்கு மிக நெருக்கமாக
அமைந்துள்ளது என்பதனால் தவறல்ல. இலக்கணவிதிகளை விட புராதனமான, மேன்மையான
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அபௌருஷேயமான வேதபரம்பரையில் தச்சம்யோ என்று
உச்சரிப்பது இல்லை. தச்சய்ँயோ என்று தான் உச்சரிக்கப்படுகிறது. ஆகவே வாசகர்
காட்டியுள்ள பிழை பிழையல்ல. மாறாக கட்டுரையாளருக்கு எமது பாராட்டுக்கள்.
2.
இரண்டாவதாக பொருட்பிழையை குறிப்பிட்டுளார் வாசகர். ’த்விபதே’ என்பதற்கு
பறவைகள் என்று தான் குறிப்பிட வேண்டும் என்று ஆணிதரமாக திரு. ரங்காச்சாரி
கூறியுள்ளார். பண்டிதர்கள் வேதங்களின் அர்தத்தை நிர்ணயிப்பது விஜயநகர
சாம்ராஜ்ய காலத்தைச் சேர்ந்த சாயணாச்சாரியாரின் உரைப்படி தான்.
சாயணாச்சாரியாரும் கூட வேதங்களின் ஆறு அங்கங்களைத் தழுவியே அவரது உரையை
அமைதுள்ளார். அதனால் மிகவும் போற்றப்படுகிறார்.
மாநுஷேப்ய: என்று
முன்னமே குறிப்பிடப்பட்டுள்ளதால் த்விபதே என்பது பறவை இனத்தைத் ’தான்’
குறிக்கும் என்று ரங்காச்சாரி கூறுகிறார். ஆனால் சாயணாச்சாரியார் கூறுவது
வருமாறு - மாநுஷேப்ய: - ’புத்ராதிப்ய: ஸ்வஸ்தி’ - (என்னுடைய) மகன்
முதலியவர்களுக்கு மங்களம் உண்டாகட்டும். த்விபதே - ’மநுஷ்யாய’ -
மனிதர்களுக்கு (மங்களம் உண்டாகட்டும்). (சாயணரின் உரை இணைக்கப்படுள்ளது)
முதல்
மனுஷ்யேப்ய: எனும் இடத்தில் தன் மகன், பேரன் முதலியவர்கள் என்று பொருள்
கொள்ளலாம். இரண்டாம் இடத்தில் ’த்விபதே’ என்று வரும் இடத்தில் என்னைச்
சார்ந்து இருக்கும் (பிற) மனிதர்கள் (சுற்றத்தார், என்னிடம்
பணிபுரிபவர்கள்) முதலியோர் என்று பொருள் கொள்ளுவதில் தவறேதும் இல்லை.
சாயணாச்சாரியார் பறவைகள் பற்றி இங்கு கூறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
த்விபதே
எனும் சொல்லுக்கு பறவைகள் எனும் பொருள் தவறல்ல. பறவைகளுக்கும் நன்மை
உண்டாகட்டும் என்பது தான் எமது விருப்பமும். எனினும், வேதங்களின் பொருளை
நிர்ணயிக்கும் போது இது தான் பொருள் இதுவல்ல என்று ஆணித்தரமாக கூறுவதற்கு
முன்னால் நன்றாக ஆய்ந்து தெளிவது சாலச்சிறந்தது. வேதங்களைப் படிப்பவர்கள்
அரிதாகிப்போன இந்த காலத்தில், அதன் பொருள் இதுவெனக் கூறுபவர் மிகவும்
அருகிப்போன இந்த காலத்தில் நாம் வேதங்களை பற்றி கூறும் கருத்து சரியாக
உள்ளதா என்பதில் மிக கவனம் வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.
References:
1. Grammar text Aṣṭādhyāyī of Panini. Available online for reference at: http://ashtadhyayi.com/ sutraani/
1. Grammar text Aṣṭādhyāyī of Panini. Available online for reference at: http://ashtadhyayi.com/
2. Taittirīyāraṇyakam, śrīmatsāyaṇācāryaviracitabhāṣy asametam , ānandāśramasaṃskṛtagranthāvali ḥ, Puṇe, 1898.
(Available online for reference at: https://archive.org/stream/ taittiriya/taittiriya_ aranyaka_sayana_01#page/n5/ mode/2up)
Comments
Post a Comment