நாலு வாக்கியங்களைப் பற்றி நாலு வார்த்தை



"சந்நோ மித்ர:" எனும் உபநிடத சாந்தி மந்திரத்தின்
முதல் நான்கு வரிகள் சொல்லும் சேதி

"ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:" என்று முடியும் சாந்தி மந்திரங்கள் வேதங்களில் பல இடங்களில் உள்ளன. வேதத்தின் அங்கமான உபநிடதங்களைப் படிக்கத் துவங்கு முன் கூட சாந்தி மந்திரங்களை உச்சாடனம் செய்வது வேத மரபு. உள்ளுலகிலும் வெளியுலகிலும் அமைதி நிலவினால் மட்டுமே உண்மைப் பொருளாகிய ஆன்ம தத்துவத்தை உணரமுடியும். அமைதியை வேண்டுவன சாந்தி மந்திரங்கள்.

தைத்திரீய உபநிடதம் அரிய பெரிய கருத்துக்களை உள்ளடக்கிய மெய்ஞ்ஞானத் தொகுப்பு. அதன் தொடக்கத்தில் "சந்நோ மித்ர:" எனத் துவங்கும் சாந்தி மந்திரம் சொல்வார்கள். கற்றல்-கற்பித்தல் ஆகிய பணிகளில் ஈடுபடுவோராகிய மாணவ-ஆசிரிய சமூகத்திற்கு பல நல்ல கருத்துக்களைத் தெரிவிக்கிறது இந்த மந்திரம். வாழ்க்கை தரும் படிப்பினைகளை உள்வாங்கிக் கொண்டிருக்கும் நாம் அனைவரும் கூட இந்த மந்திரம் தரும் சேதி என்ன என்று தெரிந்து கொள்வது நலம்.
அதிலும் முதல் நான்கு வரிகள் அழகிய, நறுமணம் பொருந்திய பூவுக்குள் இருக்கும் தேன் போல முயன்று நாடி அனுபவிக்கத்தக்கது.  அந்த நாலு வரிகளைப் பற்றி இதோ நாலு வார்த்தை -

நான்கு வரிகள்

சந்நோ மித்ர: சம் வருண:.
சந்நோ பவத்வயர்மா
சந்ந இந்த்ரோ ப்ருஹஸ்பதி:
சந்நோ விஷ்ணுருருக்ரம:
 முதலில், நான்கு வரிகளிலும் முதலில் அமைந்துள்ள இரு வார்த்தைகளை கவனிப்போம். சம் என்றால் இன்பம், மங்களம். சங்கரர்.சம்பு போன்ற சொற்களில் இதனைக் காணலாம். (சங்கரர் சம்பு- மங்களத்தை நல்குபவர் என்று பொருள்).

மங்களம், இன்பம் யாருக்கு? : - நம் அனைவருக்கும். நன்மை எனக்கு மட்டும் போதாது, நம்முடையவர்களான உலகோர் அனைவருக்கும் நன்மை உண்டாகட்டும். வஸுதைவ குடும்பகம் - பரந்த மனம் படைத்தோருக்கு  உலகம் ஓர் குடும்பம் அல்லவா! ஆக, சம் : - நம் அனைவருக்கும் மங்களம் உண்டாகட்டும் என்பது இவ்விரு வார்த்தைகளின் சாரம்.

இன்பமளிக்கும் இறைவடிவங்கள்:  
சரி, யாரிடம் இன்பமும், மங்களமும் கேட்கின்றோம்? மித்ரன், வருணன், அர்யமா, இந்திரன், பிருஹஸ்பதி, விஷ்ணு என வேதம் கூறும் ஆறு கடவுளர்களிடம்.

யார் இவர்கள்? எப்படிப்பட்ட நலனை அளிக்க வல்லவர்கள்? இவ்விரு கேள்விகளுக்கு பதில் இந்த நான்கு வரிகளின் கருத்தாழத்தை காண்பித்துக் கொடுக்கிறது. பல நூறாண்டுகளுக்கு முன் இந்த மந்திரத்திற்கு உரை எழுதிய சங்கராச்சாரியார், சாயணாச்சாரியார் ஆகியவர்களின் கருத்தை ஒட்டிய விளக்கம் இது:

மித்ரன், வருணன்  
பகலுக்கும், பிராணனுக்கும் கடவுள் மித்ரன்.(பிராணன் என்றால் நாசி வழியே காற்றை உள்ளிழுப்பது). வருணன் இரவிற்கும், அபானனுகும் கடவுள். (அபானன் என்றால் மூச்சை வெளியே விடுவது)

அதாவது, மித்ரனும் வருணனும் நமக்கு உற்சாகமான பகற்பொழுதையும், அமைதியான இரவு வேளையையும் நல்கட்டும். சீராகவும் சுவாசிக்கவும் அவர்களிருவரும் அருள் புரியட்டும் என்பதும் தெளிவு. (அவனன்றி ஓரணுவும் அசையாது எனும் போது, நாம் சுவாசிப்பதற்கு அவன் கருணை வேண்டாமா என்ன?)

யோகசாஸ்திரக் கருத்து
ஆனால் இதில் ஆழமான யோகசாஸ்திர கருத்து ஒன்றும் பொதிந்துள்ளது.  பகலுக்கும் சுவாசத்தை உள்ளிழுப்பதற்கும், இரவுக்கும் சுவாசத்தை விடுவதற்கும் - எதேனும் தொடர்பு உள்ளதா? இந்தக் கேள்விக்கான விடை அந்த யோகக் கருத்தை வெளிக்கொணர்கிறது..
     
சோம்பல், செயல்பாடுகளில் மந்தத்தன்மை ஆகியவற்றைப் போக்க மூச்சை ஆழ்ந்து உள்ளிழுக்கும் பிராணாயாமப் பயிற்சிகள் வழிவழியாக வந்த யோக ஆச்சார்யார்களால் வழங்கப்படுகின்றன. சீராகவும்  ஆழமாகவும் மூச்சுக்காற்று அதிக அளவில் நுரையீரலை அடையும் போது உற்சாகமும் செயல்திறனும் பெருகும் என்பது அறிவியல் பூர்வமான உடற்செயற்பாடு பற்றிய உண்மை.         

அதேபோல  தூக்கமின்மை, மனது ஒரேடியாக அலைபாய்வது போன்ற சிரமங்களைப் போக்க சீராக, நீண்ட நேரம் மூச்சை வெளியே விடும் பயிற்சிகளைச் செய்ய வேண்டும் என யோக வல்லுனர்கள் வலியுறுத்துவார்கள். இப்போது பகலுக்கும்-பிராணனுக்கும், இரவுக்கும் அபானனுக்கும் உள்ள தொடர்பு புரிகிறதா?

இல்லையா? தொடர்ந்து படியுங்கள்.

மித்ரனும் வருணனும் - பகலிலும் இரவிலும் -பிராணனையும் அபானனையும் - ஆழமாகவும் சீராகவும் செயல்படவைத்து முறையே செயல்திறனையும் அமைதியையும் பெருக்கி வாழ்கையை வளமாக்கட்டும் என்பது இதன் உட்பொருள்.
      
மித்ரனும் வருணனும் அருளை நல்குவார்கள். அதனைப் பெற நாம் பாத்திரர்கள் ஆவது எப்படி?

பொழுது புலரும் போதும் பொழுது சாயும் போதும் (சந்தி வேளைகளில்) முறைப்படி கற்றுக்கொண்டு தகுந்த பிராணாயாமப் பயிற்சிகளைச் செய்யவேண்டும். அது வெற்றி பெற பிரார்த்தனையும் அவசியம். அதைத் திருவினையாக்குவது அவன் அருள்.

அர்யமா
இவர் சூரியனுக்கும் கண்ணுக்கும் அதிதேவதை என்கின்றனர் உரையாசிரியர்கள். கண்ணால் பார்ப்பதற்கு ஒளியும், பார்க்கும் திறனும் தேவை. இரண்டில் ஒன்று இல்லை எனினும் காணுதல் எங்ஙனம்? ஆதவன் தன் கதிர்தூவி நமக்கு பசுமையையும் வளமையையும் அளிக்கட்டும். இப்படைப்பின் வனைப்பை கண்ணாறக் கண்டு இறைவனின் மேன்மையை நாம் உணரவேண்டும். அதற்கு சூரிய நமஸ்காரம் போன்ற பயிற்சிகளால் அர்யமாவின் அருளுக்கு பாத்திரர்கள் ஆவோம்.

இந்திரன்
தோள்களுக்கும் வலிமைக்கும் கடவுள் இவர். ஒளியும் பார்வையும் போலத்தான் தோளும் வலிமையும் அல்லவா? சுவாமி விவேகானந்தர் கூறியது போல இரும்பை ஒத்த தசைகளும் எஃகை ஒத்த நரம்புகளும் வாழ்கை வளம் பெற அவசியம். மேலும் பலஹீனர்களால் (ஆன்ம) ஞானம் அடையப்டுவதில்லை என்கிறது உபநிடதம். இடிமுழக்கம் செய்யும் மழைமேகத்தின் கடவுளும் இந்திரனே. ஆக உடற்பயிற்சிகள் பல செய்து வலிமை மிக்க இந்திரனின் அருளுக்கு பாத்திரர்கள் ஆவோம்.

பிருஹஸ்பதி
சொல்லிற்கும் அறிவிற்கும் அதிதேவதை இவர். தோளும் வலிமையும் போலல்லவோ சொல்லும் அறிவும்? ஆசிரியரின் சொற்களால் மாணவரின் அறிவு ஓங்குகிறது. அறிவினால் ஆராயப்பட்ட கருத்துக்கள் (ஒலிவடிவமான, வரிவடிவமான) சொற்களால் வெளியிடப்படுகின்றன. ஆக, கற்றலிலும் கேட்டலிலும் முழுமனதுடன் ஈடுபட்டு தேவகுருவான பிருஹஸ்பதியின் அருளுக்கு பாத்திரர்கள் ஆவோம்.    


விஷ்ணு 
இரு பாதங்களுக்கும் உடல் முழுவதற்கும் கடவுள் இவர். விஷ்ணு என்றால் (எங்கும்) வியாபித்திருப்பவர் என்று பொருள். தன் மூன்றே காலடிகளால் உலகளந்த பெருமாள் அவர் அல்லவா? சான்றேர்களை தேடி, இரு பாதங்களால் அவர்களை நாடி, நமது முழு உடலையும் உள்ளத்தையும் அவர் கூறும் கருத்தை கிரகித்துக் கொள்ள நாம் செய்யும் முயற்சியில் அவனருள் கிட்டட்டும் என்பது நம் பிரார்த்தனை.

ஆக, வேதப் பிரார்த்தனைகள் வெறும் சொற்களால் மட்டுமே செய்யப்படுவதில்லை என்பது தெளிவு. அவைகளின் அடிநாதம் இது தான் - முயற்சி நம்முடையது. அது இறை நினைவுடன் செய்யப்படும் போது அது இறைவனின் அருளைப் பெற்றுத்தருவதோடு மட்டுமல்லாமல், செய்யப்படும் முயற்சிக்கே  புனிதத்தன்மையையும் அளித்து விடுகிறது.

முடிவுரை?
உடலும் உள்ளமும் பேச்சும் சிறந்து, நம் பகலும், இரவும் இன்பமயமாக அமைய வேண்டும் எனும் பரிபூரண பிரார்த்தனை அல்லவா ``சந்நோ மித்ர`` எனத் துவங்கும் இந்த நான்கு வேத வரிகள்! இப்படிப்பட்ட இந்த நாலு வரிகளைப் நினைந்து நினைந்து, அதன் படி நடந்து, நாலு பேருக்கு நன்மை செய்யும் விதமாக வாழலாமே!.

கட்டுரையாளர்- முனைவர்..ஜெயராமன், உதவி-இயக்குனர். ஆராய்ச்சிப்பிரிவு, க்ருஷ்ணமாச்சார்ய யோக மந்திரம்.  
   

       
      
        


Comments

Popular posts from this blog

Academics in 2024| Prof M Jayaraman

Various names of Teachers in Sanskrit - Are these definitions in accordance to Sanskrit sources? - A clarification

विश्वसंस्कृतसम्मेलने (WSC) संस्कृतविदुषां Hooliganism - यन्मम प्रत्यक्षं तत् भवतां समक्षम्।