ஐ.சி.யு அனுபவங்கள் - திரும்பிப் பார்க்கிறேன்
- திரும்பிப்
பார்க்கிறேன் -
ஐ.சி.யு அனுபவங்கள்
வேண்டுகோள்:
கசப்பும் இனிப்பும்
சேர்ந்தது தான் வாழ்க்கை என்றாலும், இனிப்பை மட்டுமே நாம் பெற விரும்புவது இயற்கை. ஆகவே இனிமையையே விரும்புபவர்கள் மேலும் படிக்கவேண்டாம் என்பது
எனது தாழ்மையான வேண்டுகோள்.
2016ஆம் ஆண்டு வாழ்க்கையில்
மறக்கமுடியாததாகிவிட்டது. இந்த ஆங்கில ஆண்டின் கடைசியில், கடந்து வந்த
பாதயைத் திரும்பிப் பார்க்கிறேன். கடந்து
வந்து விட்டேன் என்பதில் மகிழ்ச்சி.
ஆயினும், இந்த
ஆண்டின் நிகழ்வுகளை, அவை தந்த அனுபவங்களை மறந்துவிடமல், நான்
எஞ்சிய வாழ்வில் தெளிவுடன் செயல்பட உதவும் ஆவணமாக இருக்கட்டும் என்பதற்காக இந்த
நிகழ்வுகளின் பதிவு எழுதப்படுகிறது. மேலும் -
ஒரு இளைஞன் கூறினான்-
"நான் எனது
பாட்டியின் பிறந்த நாளுக்கு ஒரு கால்பந்தைப் பரிசாக வழங்கினேன்" என்று
மற்றொருவன் கேட்டான்
- "பாட்டிக்கு கால்பந்து எவ்வாறு உதவும்?" என்று.
அதற்கு அவன்
கூறினான் "பாட்டி என் பிறந்த நாளுக்கு பகவத் கீதையை பரிசளித்தாரே!"
என்று.
இந்த சிறு உரையாடல், வயதிற்கு பொருத்தமில்லா பரிசைப்பெற்ற இளைஞனின் கோபத்தை
வெளிப்படுத்தும் விதமாக அமைகிறது. ஆயினும், வாழ்க்கை எப்படி, எப்போது எதிர்பாராதவிதமாக மாறும் என்பதனைக் கணிக்க இயலாது. பகவத் கீதையின்
பாடங்கள் வயதானவர்களுக்கு மட்டுமல்ல இளைஞர்களுக்கும் தேவைப்படும் எனும் கருத்து
தொனிக்கும் விதமாகவும் அமைகிறது இந்த உரையாடல்.
கணிக்க இயலாத இந்த வாழ்கையின் அனுபவங்களை எதிர்கொள்ள சமசித்ததுடனும்,
திடசித்தத்துடனும் அனைவரும் தயாராக
வேண்டும் என்பதற்கு என் வாழ்கையின் இந்த அனுபவமே ஒரு எடுத்துக்காட்டு என்பதை
எடுத்துச் சொல்லவும் கூட இந்த பதிவு.
----------------------------------------------------------
இந்த வருடத்தின் முதல் பாதி சென்றது எப்படி என்பது தெரியாது. ஆனால்
தக்ஷிணாயனத்தின் துவக்கம் முதல் நடந்தவை நினைவை விட்டு அகலாதவை.
மருத்துவரின் அறிவுரைப்படி, அவரின் கண்காணிப்பில் அல்சரேடிவ்
கொலிடிஸ் (Ulcerative Colitis) நோய் நிவாரணத்திற்காக நோய்
எதிர்ப்பு சக்தியை குறைத்துக்கொள்ளும் மருந்தினை 2016 ஜூன் மாதத்தின்
கடைசி இரண்டு வாரங்கள் உட்கொண்டேன். இதனால் எதிர்பாராதவிதமாக, அளவுக்கு மீறி நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போய் எந்தச் சாதாரணமான
கிருமியும் மிகப் பெரிய சேதத்தை விளைவிக்கும் நிலை ஏற்பட்டது.
2016
ஜூலை பத்தாம் தேதி, இரவு முழுவதும் ஜ்வரம்.
மீண்டும் மீண்டும் நினைவிழப்பு. கண்ணை மூடித் தூங்க முயன்றால் மனம் மிகவும்
நிலைகொள்ளாமல் சுழன்றது. உடல் உபாதையை விட இது பெரிய நரக வேதனை. பல போர்வைகள்
போர்த்தியும் குளிர் அடங்கா நிலை. பின்னர் சிறிது நேரம் கழித்து, குளிர் தணிந்து உடல் வெப்பம் காரணமாக கட்டாந்தரையில் கிடந்தேன்.
இதற்கிடையில் நினைவிழந்து போதல் வேறு. சிறுநீர் கழிக்க கழிவறை சென்ற நான் அங்கேயே
நினைவிழந்து போனதால், என்னை அங்கிருந்து வெளியே கொண்டுவர தூக்கமுடியாமல்
என் மனைவியும், எழுபது வயதான தந்தையும், தாயும் தத்தளித்தது மிகக் கொடுமை. வாழ்வில் முதல் முறையாக நினைவிழத்தல் /
மயக்க நிலை அப்போது தான் அடைந்தேன்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
சென்னையில் தற்போது மிகவும் பிரசித்தமாக உள்ள, நதியின் பெயரைக் கொண்ட
மருத்துவமனையில், 2016 ஜூலை 11 அன்று உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டேன். ந்யூட்ரோபீனிக் (WBCs less) செப்டிஸீமிக் (blood infection) ஷாக் என்பது தீவிரமான பிரச்சினை. இது தான் என்னுடைய பிரச்சினை என்பது விரைவிலேயே
கண்டுபிடிக்கப்பட்டது. ரத்த அழுத்தம் குறைந்து போய் பல மணிநேரம் நினைவிழந்த தன்மை.
முதல் 6
மணிநேரம், வரை
பிழைப்பது உறுதியாக கூறமுடியாது என ஐசியு டாக்டர் கூறினார். அதன் பின்னர் அதனை 48 மணிநேரம், 72 மணிநேரம் என
நீட்டித்துக் கொண்டே போனார் அவர் என்பது என் மனைவி பின்னர் சொல்ல தெரிந்து
கொண்டேன்.
ரத்ததில் சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள் என
அனைத்தும் அடிமட்டத்திற்கு சென்றுவிட்டபடியால், ரத்த
அழுத்தமும் மிகக் குறைந்து போய் இதயத்தின் செயல்பாடுகளையும் பாதித்தது.
இதற்கிடையில் எலும்பு மஜ்ஜை (Bone Marrow)
செயலிழந்து போனதால் ரத்த அணுக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டது என
கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால், வெளியிலிருந்து ரத்தம் செலுத்தப்பட்டதால் செயற்கையாக உடலில் ரத்த
அணுக்களின் எண்ணிக்கை உயர்ந்தது. ஒருவார போராட்டத்திற்கு பின் சிறிது நிலமை
சீரடைந்தது. எட்டு நாட்களுக்குப் பின் ஜூலை 19ஆம் தேதி ஐசியுவிலிருந்து சாதாரண
வார்டுக்கு நான் மாற்றப்பட்டேன். ஆனால் உட்செலுத்தப்பட்ட ரத்தம், மலத்துவாரம்
வழியாக மிகவும் வெளியேறியதனால் மீண்டும் மூச்சுத்திணறல், ரத்த அழுத்தக் குறைவு. துவங்கிய இடத்திற்கே மீண்டும் வந்தது போல ஆனது. மீண்டும்
ஜூலை இருபத்தி இரண்டாம் தேதி தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டேன். இம்முறை
பாதிப்பு மிகவும் கடுமையாக இருந்தது. அன்று நடு இரவில், மிகத் தீவிரமான
மூச்சுத்திணறல் ஏற்பட்டது, ஒரு கட்டத்தில் மிகவும் மூச்சு விடமுடியாமல் போனது.
கைகால்களை உதைத்துக் கொண்டு திணறினேன். மூச்சு முட்டியது. அது தான் எனது கடைசி
மூச்சு எனும் நினைவுடன் முயற்சியைக் கைவிட்டேன். அப்போது, உணர்வினை மட்டும் தான்
இழந்தேன் என்பது (எவ்வளவு நேரத்திற்குப் பின்போ தெரியாது) கண்விழித்த பின் தான்
தெரிய வந்தது.
அன்று இரவின் என் போராட்டத்தை அறியாத என் மனைவி அன்றைக்கு தூக்கம் கொள்ளாமல்
மிகவும் புரண்டதாக பின்னர் ஒரு நாள்,கூறினாள். மனித வாழ்க்கை என்பது நாம் கண்ணில்
காண்பதனை விட ஆழமானது. உணர்வு எனும் கண்ணில் படாத இழையால் நாம் அனைவரும்
பிணைக்கப்பட்டுள்ளோம் என்பதனை உணர்ந்தேன்.
இது தவிர - இரண்டாம் முறை தீவிர சிகிச்சைப் பிரிவில் ரத்தம் நிற்காமல்
வெளியேறிக் கொண்டிருக்கும் போது, அல்ஸரேடிவ் கொலிடிஸ்-க்கான
அறுவை சிகிச்சை செய்யவேண்டுமா வேண்டாமா என்பது பற்றி எழுந்த நிச்சயமற்ற தன்மை வேறு
சேர்ந்து கொண்டது. மருத்துவர்களுக்குள்ளேயே கூட கருத்து வேறுபாடு. இதனால் ஏற்பட்ட
மன உளைச்சல் வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.
இந்த
நிச்சயமின்மையிலிருந்து வெளிவர அல்ட்ரா ஸௌண்ட் ஸ்கானிங், ரேடியோ ஆக்டிவ் ஸ்கானிங் ஆகியவை
செய்யப்பட்டன. இதற்காக வெடவெடக்கும் குளிரில் பல மணித்துளிகள் கவுன் மட்டும்
அணிந்து பட்ட பாடும் கூட வர்ணிக்க இயலாது.
ஐஸியு-வில் தன்னந்தனியாக (இது தான் நரகமா)
மேலும் குளிர் – ஐசியுவில் பதினாறு ஏஸீக்கள் - உடலில் மெலிதான ஒரு கவுன்
மட்டும் - அடிக்கடி நழுவும் போர்வை, க்ளீனிங் (குளியல்) என்ற பெயரில் விடிகாலை
நான்கரை மணிக்கு ட்யூட்டி முடிந்து போகும் நர்ஸும், உதவியாளரும்
சேர்ந்து ஏஸி குளிரில் வெட்வைப்ஸ் (ஈரமான காகித நாப்கின்கள்) ப்ரயோகம் செய்வார்கள். இந்த ஈரம் காயும் வரை
உடல் நடுங்கி விடும்.
ஒயர்களின் வலையில் - உடல் முழுக்க அசையமுடியாத வண்ணம் ஐவி(Intravenous) வழி (ரத்த நாளகள் வழியே) மருந்துகளுக்கான ஒயர்களும், திட ஆகாரம் அதிகமில்லை என்பதனால்
க்ளூகோஸ் செலுத்துவதற்காக ஊசிகளும், ஒயர்களும்
- கழுத்திலும், இரு கைகளிலும், தொடை
துவங்கும் இடத்திலும் சொருகப்பட்டிருந்தன. சில ஒயர்கள் அசையாமல் இருப்பதற்காக உடலுடன்
தைக்கப்பட்டும் இருந்தன. திரும்பி படுக்கக் கூட பிறர் உதவி தேவை. மேலும், ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு ஆகியவைகளை துல்லியமாக
அறிய இருக்கும் கருவிகளிலிருந்து வரும் ஒயர்கள் உடலில் பொருத்தப்பட்டிருந்தன. ஐவிக்கான
ஒயர்கள் நான்கைந்து நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்படும் போது ஏற்படும் வேதனை சொல்லி
மாளாது. கழுத்தில் சென்ட்ரல் லைன், தொடை துவங்கும் இடத்தில்
ஆர்டரியல் லைன் என்பதாக இரண்டு பெரிய ஐவி ஒயர்கள். இவைகள் உடலுடன் தைக்கப்பட்டிருக்கும்
என்பதனால், தையல் பிரித்து மீண்டும் தைத்தல் எனும் வேதனையான நிகழ்வு ஐந்தாறு
நாட்களுக்கு ஒருமுறை நடக்கும். பல நாட்களாக படுத்துக் கிடப்பதால் பெட் ஸோர்
ஏற்படாமல் இருக்க பலஹீனமான இந்த உடலை தினம் ஒருமுறை புரட்டிப்போட்டு பரிசோதனை செய்வார்கள்.
அப்பப்பா! சரமாரியாக பெற்ற இந்த அனுபவங்களை அசைபோடும் போது சராசரி வாழ்வில்
ஏற்படும், ஏற்படவிருக்கும் சிரமங்கள் அனைத்தையும் தாங்கும் மனப்பக்குவம் ஏற்பட்டு
விடுகிறது.
சிரமத்திலும் ஓர் வெள்ளிக்கீற்று - துவக்கத்தில் ஐசியூவில் மிகவும் பலவீனமான
நிலைமையினால் பிதற்றிக்கொண்டிருந்தேனாம். என் அண்ணா கூறினான். பிதற்றலும் கூட
பதஞ்ஜலி யோகஸூத்ரங்கள் பற்றி இருந்தனவாம். இது பற்றி நினைக்கும் போது, தன்னிலை
மறந்த நிலையிலும் நல்ல விஷயங்கள் வெளிப்படும் விதம் என் ஆளுமையில் ஆழமான பதிவினை
ஏற்படுத்திய ஆசிரியர்களையும், நல்ல விஷயங்களை கேட்க ஆர்வம் கொண்ட மாணவர்களையும்
மனதார வணங்குகிறேன்.
இரவு பகல் தெரியாத நிலை
கருப்பு
காகிதத்தால் மறைக்கப்பட்டிருக்கும் கண்ணாடியால் நான்காவது மாடி ஐஸியுவிலிருந்து
வெளியே என்ன நடக்கிறது என பார்க்க முடியாவண்ணம் இருந்த நிலை இருந்தது. இதனால் இரவு
எது பகல் எது என்று ஊகிக்க இயலாத நிலை. பல முறை ஊகித்து நர்ஸ்களிடமும், உணவு
கொண்டுவரும் மனைவி தந்தையார் ஆகியவர்களிடம் நேரத்தைப் பற்றி கூறும் போது, என் ஊகம்
தவறாகவே இருந்தது. கரைகாணாத காலவெள்ளத்தில், பிடிப்பேதும் இல்லாமல் அடித்துச்
செல்லப்படுவதாக உணர்ந்தேன்.
தூக்கமின்மை
நாள்முழுக்க
படுக்கை, ஆனால் சிறிதும் தூக்கமில்லை. நடு
இரவில் டியூட்டி நர்ஸ்கள் கூட தூங்கி விழும் போது என்னுடைய தூக்கமின்மையின்
கொடுமையை உணர்ந்தேன். ‘நித்ராயத்தம் ஸுகம் துக்கம்’ – ஸுக-துக்கங்கள் (அதன்
தாக்கம்) நம் தூக்கத்தின் தரத்தினை பொருத்து அமைகின்றன என்கிறது ஆயுர்வேதம்.
அப்பட்டமான உண்மை!
ஜடத் தனிமை
மனதிற்கு
இதமளிக்கும் இயற்கைக் காட்சிகளின் படங்கள் ஏதாவது வைத்திருக்கலாம் ஐசியுவில்.
நோயாளி தூக்கமில்லா வேளையில் அதனையாவது பார்த்துக்கொண்டிருக்கலாம். மானஸிகமாக
ஜபமும், அனுஷ்டானமும் செய்தது போக செய்ய
ஏதுமில்லாமல் சூனியத்தை வெறித்த வண்ணம் ஜடமாக கிடந்த பொழுதுகள் பல.
அந்தரங்கம் ஏது!
சிறுநீர்
வெளியேற்ற பிறப்புறுப்பில் வேதனையளிக்கும் ஒரு நாளம் பொருத்தப்பட்டது. ஒவ்வொரு
முறை மலம் வெளியேற்றுவதும் படுத்தபடியே - பெட் பேனில் - பலர் உதவியுடன். என்ன
கொடுமை. இறைவா! யாருக்கும் வேண்டாம் இந்தத் துன்பம்!
மூச்சுத் திணறல்
மூச்சுத்திணறலை
சீர் செய்ய மூன்றுவிதமான ஆக்ஸிஜன் கருவிகள் – தேவைக்கேற்ப மாற்றி மாற்றி பொருத்தப்பட்டன. ஒன்று - மூக்கில் மெல்லிய இரு குழாய்கள், இரண்டாவது சிறிது அதிகமாக மூச்சுத்திணறல் இருக்கும் போது அடுத்த அளவு மாஸ்க். மூச்சுத் திணறல் மிகவும் அதிகமான போது, தானே ஆக்ஸிஜனை வேகமாக உட்செலுத்தும் ஆக்ஸிஜன் கருவி (non invasive ventilator). வெண்டிலேட்டரைப்
பொருத்தியிருக்கலாம். சிரமம் கொஞ்சம் குறைவாக இருந்திருக்கும். ஆனால் நோய்
எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருந்த நிலையில், வெண்டிலேட்ட்ரால் கிருமி தொற்று
ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதனால் மருத்துவர் non invasive ventilatorஐ பயன்படுத்தினார். இந்தக்
கருவி பலமணி நேரம் பொருத்தப்பட்டிருக்கும். இந்தக் கருவியைப் பொருத்தினால் வாய் உலர்ந்து போகும். தண்ணீர் குடிக்க வேண்டி தோன்றும், உதடு வெடித்து, பாளம் பாளமாகிவிடும். பேச முடியாது. ஆனால் உணர்வு
இருக்கும். எவ்வளவு தான் செய்கையால் கெஞ்சினாலும் நர்ஸ் அடுத்த டாக்டர் விஸிட் வரை
அதனை சுழற்ற மாட்டார். என்னே அதனால் பட்ட பாடு!
பீதி
பக்கத்து
படுக்கைகளில் பிறர் படும் கஷ்டமும் மன வேதனையளித்தது. ஐசியுவில் அருகில் இருந்த ஒருவர் போராடி இறந்தே
போனார். அதனால் பீதியும் அதைரியமும் ஏற்பட்டது. பிறகு, இதுவே கூட மனதிற்கு
ஒருவிதமான அமைதியையும் தைரியத்தையும், அளித்தது. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
எனும் மனோதிடமும் ஏற்பட்டது.
.
மருந்துகளின் பக்க விளைவுகள்
மருந்துகள் (ஆன்டி்பயாடிக்) காரணமாக முதல் சில நாட்களில் உடல் பாகங்கள் அனைத்தும்
ஊதிப் போய்விட்டன. எந்த உறுப்பையும் நகர்த்த முடியா வண்ணம் ஆகி விட்டது. பின்னர்,
ஆன்டிபயாடிக் குறையக் குறைய கிரமமாக உடல் வற்றியது. பத்து கிலோ வரை உடல் எடை
குறைந்து போய்விட்டது. எலும்பும் தோலுமாக ஆகிப் போனேன்.
முதல் முறையாக பிஸியோ தெரபிஸ்ட் என்னை எழுந்து அமர வைத்தும், சில அடிகள் எடுத்து வைக்கவும் கூறிய போது தான் பெரிய அதிர்ச்சி. என்னுடைய
கால்களுக்கு என்னுடைய உடலைத் தாங்கும் சக்தி இல்லாமல் போய்விட்டது என்பதனை
உணர்ந்தேன். மருந்துகளின் தாக்கத்தினாலும், பல நாட்கள்
அசைவற்று படுத்துக் கிடந்ததாலும் ஏற்பட்ட இந்த பாதிப்பினால் இனிமேல் நிரந்தரமாக வீல் சேர் தான் என நினைத்தேன். சுயசார்பின்மையை
எண்ணி வேதனையடைந்தேன். இறைவா! பிழைத்து வந்த எனக்கு கஷ்டங்கள் பல ஏற்பட்டாலும்,
இறுதி வரை சுயசார்பு எனும் ஒரு வரத்தை நல்குவாய் என்பது தான் எனது அன்றாட பிரார்த்தனையாக
இருக்கிறது.
தங்கள் பிரச்சினைகளை அலசும் மருத்துவப் பணியாளர்கள்-
ஆஸ்பத்திரியில்
மருத்துவப் பணியாளர்களிடையே இடையே ஏற்படும் பாலிடிக்ஸ், உரசல்கள், சச்சரவுகள்
சகஜமானவை தான். நேயாளியின் காது பாட அதனை அலசி ஆராய்ந்து அங்கலாய்க்கும் பணியாளர்கள்
சிலர். ஏற்கனவே உடல் உபாதை, இவர்களின் பாலிடிக்ஸை வேறு கேட்க
வேண்டும். இவர்களுடைய இத்தகைய செயல்பாட்டினால், நோயாளிகள்
காதுபட என்ன பேசவேண்டும் எது கூடாது என்பது பற்றி இவர்களுக்கு பயிற்சி இருக்குமா
இருக்காதா என்பதே கேள்விக்குறியாகிவிடுகிறது. போகட்டும். இவர்களும் மனிதர்கள்
தானே, குறை சொல்லி என்ன பயன்.
உதவிய நல்ல உள்ளங்கள் – கரையேறினேன்!
இரண்டாம் முறை ஐசியுவில் இருந்த போது எலும்பு மஜ்ஜை செயல்படத் துவங்கியது
கடவுள் அருளால் என கூற வேண்டும். மருத்துவர்கள், குறிப்பாக தீவிர சிகிச்சைப் பிரிவின் பொறுப்பாளரான ஒரு இளம் மருத்துவரின்
கணிப்பும் உறுதியான செயல்பாடுகளும் பல நேரங்களில் சாதகமான பலன்களைத் தந்தன.
டாக்டர் சுஷோபன் மித்ர உண்மையில் மித்ரன் தான். பல நண்பர்களின், உறவினர்களின், அலுவலக சக ஊழியர்களின், நலனவிரும்பிகளின் ப்ரார்த்தனைகளால்
(பல கோவில்களின் ப்ரார்த்தனை, பல ஆயிரம் முறை விஷ்ணு ஸஹஸ்ர
நாம பாராயணம், வேதபாடசாலை ஒன்றில் பெரியவர்கள்
வழிகாட்டுதலில்
சில நூறு முறை ருத்ர பாராயணம், நான் படித்த குருகுலத்தில் எனக்காக பலமுறை
ம்ருத்யுஞ்ஜய ஜபம்) சரியான ஆன்டிபயாடிக்கைச் செலுத்தி மித்ரா நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார். அனுபவம்
மிக்க என்னுடைய கேஸ்ட்ரோ மருதுவரின் பொறுமையான செயல்பாடு ஆரம்பத்தில் பொறுமையைச்
சோதித்தாலும், மிகவும் சிக்கலான
தருணத்தில் அவரது உறுதியான செயல்பாடு கரையேற்றியது எனக் கூற வேண்டும். ஜூலை கடைசி
வாரத்தில் பொது வார்டுக்கு மாற்றப்பட்டு, சில நாட்களின்
கண்காணிப்பிற்குப் பின் எலும்பு மஜ்ஜை சரியாக செயல்படத் துவங்கி நிலைமை சீரான
பிறகு சரியாக ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வீடு திரும்பினேன்.
எனது மனைவி, முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சிக் கட்டுரையை சமர்ப்பிக்க
கடைசி சில மாதங்களே இருந்தன. அந்தச் சில மாதங்களில் எனக்காக இரண்டரை மாதங்கள்
ஓய்வு ஒழிவின்றி பம்பரமாக சுழன்று செயல்பட்டதை நினைத்தால், இன்னும் எத்தனை ஜன்மம்
எடுக்க வேண்டும் இந்தக் கடனை திருப்பிச் செலுத்த என்று தோன்றுகிறது. கலியுக
சாவித்ரி என்று பெரியவர்கள் அவளை அழைத்தது மிகையல்ல. ஒருபுறம் டாக்டர்களுடன்
கலந்தாலோசனை, மறுபுறம் வயதான எனது பெற்றோருக்கும் அவளது பெற்றோருக்கும்
தைரியமளிக்க வேண்டும். நண்பர்கள், நலன்விரும்பிகள் ஆகியவர்களின் பரிவான
விசாரிப்புகளுக்கு பொறுப்புடனும், பொறுமையுடனும் பதிலளிக்க வேண்டும்.
இவையனைத்தையும் சிறிதும் பதற்றமின்றி அவள் செய்ததை எண்ணி எண்ணி நான் மட்டும்
வியக்கவில்லை, அவளுடன் அந்த கட்டத்தில் தொடர்பிலிருந்த அனைவரும் கூட வியந்து
பாராட்டினர். எனது பெற்றோரை மனதாலும் உடலாலும் உளைச்சலுக்கு உட்படுத்தியதை எண்ணி
மனம் கலங்குகிறது. ஆயினும் அவர்களின் பரிவும், பாசமும் மனதிற்கு ஆறுதலையும்
இதத்தையும் அளித்தன. கள்ளம்கபடமற்ற எனது சிறிய மகளை எண்ணி ஐசியுவில் என் மனம்
பரிதவிக்கும். நான் பட்ட கஷ்டங்களை அவள் முழுமையாக உணரவில்லை என்றாலும், உள்ளூர
அவளும் கூட அவ்வளவு உற்சாகத்துடன் இல்லை என்பதனை நான் உணர்ந்தேன். அவ்வப்போது அவள்
என்னை வந்து பார்த்த போது மயிலிறகினால் வருடியது போன்ற இன்பம் ஏற்படும்.
ஆஸ்பத்திரியிலிருந்து ஆகஸ்ட் மாதம் வீடு திரும்பினேன். ஆனாலும் உடல் மிகவும்
பலவீனமாகத் தான் இருந்தது. துவக்கத்தில் சொந்தக் காலில் நிற்கமுடியாமலும், அதிக
நேரம் அமரமுடியாமலும், பேசமுடியாமலும் இருந்தது. எப்போதுமே ஒரு தலைசுற்றல் இருந்து
கொண்டே இருக்கும். மெல்ல மெல்ல உடல் நிலை முன்னேறியது. இந்த மெல்ல மெல்ல என்பதனை
‘மிகவும் மெல்ல மெல்ல’ என படிக்க வேண்டும். அவ்வளவு நிதானமான முன்னேற்றம். முருகாலயக்
கந்தனின் கருணை என்று தான் கூறவேண்டும். அவனருளாலே, அவனைப் போற்றி என் பிணி தீர
நூறு வடமொழிச் செய்யுட்களை இயற்றினேன். இயற்றிய பின் மாலை வேளையில் இறைவன் முன்
படித்துக் காட்டிய மறு கணம் (ஒரு நூற்றாண்டு காலமாக நாள் தவறாமல் பூஜை நடக்கும்)
திருவள்ளூர் முருகாலயத்திலிருந்து என் உடல் நிலை பற்றி விசாரிப்பதற்காக உறவினர் ஒருவர்
தொலைபேசியில் தொடர்பு கொண்டார். முருகாலயத்தின் முருகன் என் ப்ரார்த்தனைக்கு செவி
சாய்த்துவிட்டார் எனும் நம்பிக்கை தோன்றியது. படிப்படியாக முன்னேறி செப்டம்பர்
மாதக் கடைசியில் மீண்டும் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளத் துவங்கினேன்.
பல நாட்கள் ஐசியு என்பதால் அதற்கான செலவு பற்றி கவலை கொண்ட உறவினர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், அலுவலக
நண்பர்கள், அலுவலக அதிகாரிகள், நலன்விரும்பிகள்
ஆகியோர் அளித்த எதிர்பாராதவிதமான பண உதவிகள், மருத்துவ
ஆலோசனைகள், ப்ரார்த்தனைகள், கவலைதோய்ந்த
விசாரிப்புகள் ஆகியவைகளை எண்ணிப் பார்க்கும் போது – இன்றும் நன்றியுடன் கண்ணீர்
பெருகுகிறது.
நிறைவு
.
“விபத: ஸந்து ந:
ஶஶ்வத் தத்ர தத்ர ஜகத்குரோ!” –
இறைவா! மீண்டும் மீண்டும் எங்களுக்கு சிரமங்களைக் கொடு என்கிறாள் குந்தி தேவி
பாகவத புராணத்தில். அப்போது தான் இறை நினைவுடன் வாழ்வினை கழிக்கலாம் என்பது
தாத்பர்யம்.
மீண்டும் இவ்வளவு துன்பத்தை தாங்கும் உடல் சக்தி எனக்கு இருக்கிறதா என்பது
தெரியாது. ஆனால், மனம் இவ்வனுபவங்களால் நன்கு புடம் போடப்பட்டுள்ளது என்பது என்னவோ
உண்மை தான். இவ்வனுபவங்களை மறவாமல், அதன் படிப்பினைகளை உணர்ந்து செயல்படும் வண்ணம்
அனுகிரஹிப்பாய் இறைவா என்பது தான் எனது பிரார்த்தனை. மேலும், யாரும் இவ்விதமான
துன்பங்களை அடையவேண்டாம் என்பதும் கூட எனது உள்ளார்ந்த வேண்டுதல்.
தேசத்தையும், குறிப்பாக தமிழ்நாட்டையும் உலுக்கியெடுத்த நிகழ்வுகளைக்
கண்டது இந்த ஆண்டு. என் வாழ்விலும் கூட இவ்விதம் மறக்கமுடியாத
அனுபவங்களை நல்கிய இந்த ஆங்கில ஆண்டு அனைவருக்கும் சுபமாக நிறையட்டும்.
ஸர்வே பவந்து ஸுகின:
ஸர்வே ஸந்து நிராமயா:
ஸர்வே பத்ராணி பஶ்யந்து
மா கஶ்சித் து:க-பாக் பவேத்
அனைவரும் இன்புற்று இருக்கட்டும். அனைவரும் பிணியற்று இருக்கட்டும். எல்லோரும் எல்லா நன்மைகளையும் பெறட்டும். யாரும் துன்பப்பிடியில் சிக்காதிருக்கட்டும்.
*************
Comments
Post a Comment