திருத்தணி கோயிலில் இன்று...

நான் பிறந்த தேதியும், பிறந்த நட்சத்திரமும் ஒரே நாளில் இன்று ஒன்றாக வந்தது. இதனை முன்னிட்டு குடும்பத்துடன் திருத்தணி சென்று வந்தோம்.
திருத்தணிகை முருகனை சஷ்டி தினத்தன்று தரிசிக்கும் பாக்கியம் இன்று வாய்க்கப்பெற்றேன். மனம் பூரிப்படைந்தது.

ஆனால்...

மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நூற்றைம்பது ரூபாய், நூறு ரூபாய் , இருபத்தி ஐந்து ரூபாய் என்று பல கட்டணங்கள் என் அப்பன் முருகனை தரிசிக்க. வியாபாரம் அமோகமாக நடக்கிறது. வயதான தாய் தந்தையர், வெயில், சிறு குழந்தை, நவராத்திரி ஆகியபடியால் மாலைக்குள் சென்னையில் வீட்டில் இருக்கவேண்டும் என்று மனைவியின் வேண்டுகோள், ஆகிய காரணங்களால் வேறு வழியில்லாமல் நூறு ரூபாய் சிறப்புக்கட்டணம்
கொடுத்து தரிசனம் பெற்றோம்.

நூற்றைம்பது ரூபாய் கொடுங்கள் எந்த வரிசையிலும் நிற்க வேண்டாம். நேரே கர்ப கிருஹத்தில் தரிசனம் செய்விக்கிறேன் என்று பேரம் பேசினார் ஒரு கோயில் சிப்பந்தி சிகாமணி. ஆகமமாவது விதியாவது. பயமாவது, பக்தியாவது.

இது கர்ப கிருஹம் பற்றி. காரிலிருந்து இறங்கி கோயில் வரை சிறிது மலைப்பாங்கான பாதை. அதனை நடந்து கடக்க, மேற்கூரையுடன் பாதை போடப்பட்டுள்ளது. ஆனால், பாதை நெடுகிலும், வியாபாரிகள், பிச்சை எடுப்போர் அடைத்துக்கொண்டிருக்கின்றனர். அனைவரிடமும் கை நீட்டியிருபார்கள் போலிருக்கிறது. கோயிலை நோக்கி செல்லும் பக்தர்கள் தவிர அனைவரும் அந்த மேற்கூரையுள்ள பாதையில் இருந்தனர். பக்தர்கள், வயதானவர்கள் வியாபாரிகளைத் தாண்டி தடுக்கிக்கொண்டு செல்ல வேண்டும். இவர்களை தவிர்க்க வேண்டும் என்றால் வெயிலில் செல்ல வேண்டும்.

கோயிலைச் சுற்றி சுகாதாரமற்ற சூழ்நிலை சாக்கடையும் ஈக்களும் நீக்கமற நிறைந்துள்ளன. கோயிலுக்குச் செல்லும் வழியில் வழிமறித்து, பொருட்களை திணிக்காத குறையாக வியாபாரம் செய்யும் வியாபரிகள் தொல்லை. இவ்வனைத்தையும் கடந்து தான் முருகனை தரிசிக்க முடியும். சுற்றுப்புறம் இப்படியிருந்தால் பக்தி எப்படி மேலிடும். இது அறநிலையத்துறை கோயிலை நிர்வகிக்கும் அழகு.

பக்தர்களின் போக்கு எப்படி உள்ளது. அதுவும் கவலையளிக்கும் விதமாகத்தான் இருக்கிறது. கோயிலுக்குள் வரிசையில் தரிசனத்திற்காக நிற்கும் போது ஒரு பக்த சிகாமணி, தான் குடித்த எச்சில் ப்ரூட்டி பானத்தின் டப்பாவை கோயிலுக்குள்ளே வீசி எறிந்தார். அதனை எதிர்த்து குரல் கொடுத்தேன். கோயிலுக்குள் இப்படி குப்பை எச்சில் போடலாமா? என்று கத்தினேன். பலமுறை தொடர்ந்து கத்திய பின் அவர் அந்த எச்சில் டப்பாவை கையில் எடுத்துக்கொண்டார். நூற்றுக்கணக்கானவர்கள் இந்த வரிசையில் இருந்தனர். அனைவரும் நடந்தது அனைத்தையும் கவனித்துக்கொண்டு தான் இருந்தார்கள். ஆனால் ஒருவரும் மூச்சு விடவில்லை.

கோயில்கள் அறநிலையத்துறையினர் கட்டுப்பாடிலிருந்து விடுபெற்று பக்தர்கள் நிர்வாகத்தில் இருப்பது தான் உசிதம். அது தான் நடக்கப்போகிறது. ஆனால் மக்கள் அதனை ஏற்று நடத்தத் தயாராக உள்ளார்களா? கோயிலின் தூய்மை மேன்மை ஆகியவற்றை காக்கும் மன நிலை கொண்டுள்ளார்களா? கோயிலில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதனை அறிந்துள்ளார்களா? இது சிந்திக்க வேண்டிய விஷயம்.

கோயில்களை பக்தர்கள் நிர்வகிக்க எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் அவசியமோ, மக்கள் இயக்கம் அவசியமோ, அதே போல, அதனுடன் கூடவே, கோயிலை தூய்மையாக வைத்திருத்தல் ஒவ்வொரு பக்தரின் கடமை என்பதனையும் பக்தர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இவ்விஷயம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட வேண்டும். கோயிலில் பய பக்தி இருக்க வேண்டும். இல்லையென்றால். என்னுடைய பிரார்த்தனையை நான் செலுத்தி விட்டேன், என் வேலை ஆகி விட்டது கோயில் எப்படிப்போனால் என்ன என்ற நிலை ஏற்பட்டுவிடும். ஏற்கனவே இப்படித்தான் இருக்கவும் செய்கிறது. ஆக கோயிலைக் எப்பாடுபட்டாவது காப்பது, தூய்மையாகப் பேணுவது ஒவ்வொரு பக்தரின் கடமை எனும் உணர்வு ஊட்டப்பட வேண்டும். இப்படிப்பட்ட விழிப்புணர்வு கொண்ட பக்தர்கள் குழாம் தான் கோயிலை நிர்வகிக்க வேண்டும் .

நானும் கோயிலை அசுத்தப்படுத்தக்க்கூடாது பிறரையும் அசுத்தப்படுத்த விடக்கூடாது. இப்படிப்பட்ட விழிப்புணர்வும், அதனைசெயலில் காட்டும் முனைப்பும் பக்தர்களிடன் ஏற்பட்டு விட்டால், விழிப்புணர்வு பெற்ற பக்தர்கள் சுற்றிலும் நிறைந்திருக்கும் கோயிலில் அறநிலையத்துறைக்கும் கூட பயபக்தி ஏற்பட வாய்ய்புண்டு.

தூய்மை இருக்கும் இடத்தில் தான் தெய்வீகம் ஓங்கும். ஆன்மிகத்தை போதிக்கும் யோகசூத்திரங்களில் பதஞ்சலி முனிவர் அஷ்டாங்க யோகத்தில், இரண்டாவது அங்கமான நியமத்தில் ’சௌசம்’ தூய்மை என்பதனை முதன்மையான நியமமாக சேர்த்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
தூய்மையான பாரதம் எனும் இயக்கத்தில் தூய்மையான கோயில் என்பதும் சேர்ந்தது தான் அல்லவா!

"தூய்மையான கோயிலிலே மேன்மையான பக்தி" என்பது இதற்கான வாசகமாகக் கூட கொள்ளப்படலாம்.

"ஸ்வச்ச மந்திர் ஸே ஶ்ரேஷ்ட பக்தி"

பி.கு. - பக்தர்கள் கையிலிருந்து குரங்குகள் தின்பண்டத்தை பறிப்பது குறித்த எச்சரிக்கை தகவல் பலகைக்கும் , அறநிலையத்துறை தரிசன கட்டண தகவல் பலகைக்கும் முடிச்சுப் போட்டு பார்க்க வேண்டாம்!

Comments

Popular posts from this blog

Academics in 2024| Prof M Jayaraman

Various names of Teachers in Sanskrit - Are these definitions in accordance to Sanskrit sources? - A clarification

विश्वसंस्कृतसम्मेलने (WSC) संस्कृतविदुषां Hooliganism - यन्मम प्रत्यक्षं तत् भवतां समक्षम्।