ஸ்வாமி ரகுநாதாநந்தர் – தெய்வமே தேடி வந்து அருள்புரிந்த மகாத்மா
ஸ்வாமிஜி பெரியப்பா என்று எனக்கு சிறுவயதில் எனது
பெற்றோரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட, ராமக்ருஷ்ண மடத்தின் ஸ்வாமி ஶ்ரீ ரகுநாதாநந்தர் (1930-2018) இன்று நம்மிடையே
இல்லை. தனது எண்பத்து நான்காவது வயதில் 2018
அக்டோபர் ஒன்றாம் தேதி பரம்பொருளுடன் ஒன்றினார்.
முன்னதாக, செப்டம்பர்
மாதம் 21 தேதி ஸ்வாமிஜியின் கடைசி சகோதரரான எனது தந்தையுடன்
(ஶ்ரீ எஸ் எஸ் மகாதேவனுடன்) பேலூர் -கல்கத்தா சென்று ஐ.சி.யூ.வில் சிகிச்சை பெற்றுவந்த
அவரை தரிசித்தேன். அவருடன் பேச நானும் எனது தந்தையும் முயன்றோம். அவர் காதருகில்
வேத மந்திரங்களை உச்சரித்தேன். அவர் பாதம் பணிந்தேன். அவர் உடல்நிலையில் முன்னேறம்
காண்பது மிக அரிது என்று அறிந்து
கடைசியாக கனத்த இதயத்துடன் சென்னை திரும்பினேன்.
த்வாவிமௌ புருஷௌ லோகே ஸூர்யமண்டலபேதினௌ|
பரிவ்ராட் யோகயுக்தஶ்ச ரணே சாபிமுகோ ஹத:||
இரண்டு விதமான மனிதர்கள் ஸூர்யமண்டலத்தை கடந்து
பரம்பொருளுடன் ஒன்றுவார்கள். ஒருவர் வைராக்கியசாலியான, யோகமார்கத்தில் நிலைத்த ஸந்நியாஸி.
மற்றொருவர் நேருக்கு நேர் போர்புரிந்து போர்க்களத்தில் உயிர்துறந்த வீரர்.
சாஸ்த்ரங்களில் சிறிது அறிமுகம் உள்ளபடியால்
அறிவுப்பூர்வமாக இந்த விஷயம் நான் அறிந்தது தான். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக
ஸந்யாஸத்தில் நிலைத்திருந்த ஸ்வாமி ஶ்ரீ ரகுநாதாநந்தர் ஸூர்யமண்டலத்தைக் கடந்து
பரம்பொருளில் ஒன்றிவிடுவார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை எனக்கு. ஆனாலும்
ஸ்வாமிஜி பெரியப்பா இன்று நம்முடன் இல்லாதது உணர்வுப்பூர்வமாக மனதை
கனக்கச்செய்கிறது.
ஆனால் அவர் மறைவு பல விஷயங்களை மனதில் தோன்றவைத்தது.
தியாகம், சேவை தான் நமது தேசிய லட்சியமாக வேண்டும்
என்று ஸ்வாமி விவேகானந்தர் விடுத்த அறைகூவலை செவிமடுத்து வீடுவாசல் துறந்து
சுயநலமற்ற தொண்டில் தன்னையே ஈடுபடுத்திக்கொண்ட பல மகான்களுள் ஒருவர் நமது
குடும்பத்தலைமகன் ஶ்ரீ ராமையா (ஸ்வாமி ரகுநாதாந்தரின் பூர்வாசிரம பெயர்). ஆம். எனது
தாத்தாவின் மூத்த மகனாவார் அவர்.
அவருக்குப் பின் இரண்டு சகோதரிகள், என் தந்தை உட்பட
இரண்டு சகோதரர்கள். அவர் தனக்காக வாழவில்லை. இந்தச் சமுதாயத்திற்காக வாழ்ந்தார்.
அவர் விட்டுசென்றிருக்கும் சொத்து - அவர் வாழ்விலிருந்து நாம் அறியும் பாடங்கள்
தான். இப்படிப்பட்ட தன்னலமற்ற அவர்
வாழ்வினை எண்ணும் போது என் வாழ்வில் தன்னலம் கருதாமல் நான் இது வரை என்ன
செய்திருக்கிறேன் என்று இன்று
சிந்தித்துப் பார்க்கிறேன்.
செப்டம்பர் 21ம் தேதி பேலூர் சென்றிருந்த போது நமது ஸ்வாமி ஶ்ரீ ரகுநாதாநந்தரை ஆன்மிகத் தந்தையாகப் போற்றும், கடந்த பதினெட்டு வருடங்களாக ராமக்ருஷ்ண
மடத்தில் ஸந்த்யாஸியாக சேவையாற்றி
வரும் ஒரு மகாத்மாவைக் கண்டேன், அவருடன் என்
தந்தையார் உரையாடியபோது அருகில் இருக்கும் வாய்ப்பைப் பெற்றேன். நமது ஸ்வாமி ஶ்ரீ
ரகுநாதாந்தர் பற்றி எவ்வளவு உயர்வாகப் பேசினார் அவர்! என் தந்தை அவரைப் பணிந்து
வணங்கும் போது அதனைத் தடுத்து ஆரத் தழுவிக்கொண்டார் அவர். உங்களைப் பார்த்தால்
ராம் மகராஜைப்(ஸ்வாமி ரகுநாதாநந்தரைப்) பார்ப்பது போல உள்ளது என்றார் அவர். நமது
ஸ்வாமிஜியும், தான் மட்டும் ஸ்வாமி
விவேகாநந்தர் வழியில் தன்னலமற்ற சேவைசெய்யவில்லை, பலரையும் ஆன்மிகத்திலும்,
சேவையிலும் ஈடுபடுத்தி, பலருக்கும் வழிகாட்டியாகவும் திகழ்ந்துள்ளார்
என்பதனை நேரிடையாக அறிய நான் பெற்ற
பொன்னான வாய்ப்பு அது. வீண்வம்பு
பேசாமல், வீணாகப் பொழுதைக் கழிக்காமல் நல்ல விஷயங்களில்
மற்றவர்களை நாட்டம் கொள்ளச் செய்ய இதுவரை நான் என்ன செய்துள்ளேன் என்று இன்று நான்
சுயபரிசோதனை கொள்கின்றேன்.
ஸந்யாஸியானாலும் சென்னையில் பணியிருந்தால் வாய்ப்பு நேரும்
போது தனது பெற்றோரை அவர்கள் இருந்தவரை, தரிசித்து அவர்கள் நலம் விசாரிக்க, ஆசிபெற வீட்டிற்கு
வந்திருக்கிறார் ஸ்வாமி ரகுநாதாநந்தர். அப்போது தான் அவரை தரிசிக்கும் பாக்கியம்
குடும்பத்தாருக்கு கிடைக்கும். நானும் ஸ்வாமிஜியை தரிசித்தது அந்த
சந்தர்ப்பங்களில் தான். லௌகிக பந்தங்களைத்
துறந்தவரே பெற்றோர் நலனில் இவ்வளவு கவனம் கொண்டிருக்கிறார். குடும்பஸ்தனான நான்
என் பெற்றோரை எவ்வாறு கவனித்துக்கொண்டிருக்கிறேன் என்று இந்த சந்தர்பத்தில்
நினைத்துப் பார்க்கிறேன்.
"நீங்க எல்லாரும் நன்னா இருங்கோ" என்று அவர்
பலமுறை ஆசி கூறி இருக்கிறார்.
கள்ளங்கபடமற்ற, சிரித்த முகத்துடன், முழுமனதோடு தனது கம்பீரமான குரலில் அவர் கூறிய ஆசிகள் இன்றும் எனது
செவியில் எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன. எத்தனை முறை என் வாழ்வில் பிறர் நன்றாக இருக்க வேண்டும்
என்று பரந்த மனத்துடன் வாழ்த்தியிருக்கின்றேன்? இன்று நான்
நினைத்துப் பார்க்கிறேன்.
இவை என் மனதில் எழும் எண்ணங்கள். எனக்கு ஸ்வாமிஜியுடன்
பழகக் கிடைத்த வாய்ய்புகள் மிகச் சிலவே. அதன் அடிப்படையில் என் கருத்துக்களை இங்கே
பகிர்ந்து கொண்டிருக்கின்றேன்.
இப்படி பல வாழ்வியல் பாடங்களைப் புகட்டிய ஸ்வாமி ஶ்ரீ
ரகுநாதாநந்தர் எங்கள்
குலதெய்வத்தின் அருளை பரிபூரணமாகப் பெற்றவர். கல்கத்தாவிலிருந்து
பல மைல் தூரத்தில், தென் தமிழ்நாட்டில்
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள குக்கிராமமான சுத்தமல்லியில் இவ்வருடம் (2018) ஆகஸ்ட் 31ம்
தேதி பல பத்தாண்டுகளுக்குப் பிறகு எங்களது குலதெய்வமான ஶ்ரீரகுபதி ஸ்வாமியின்
கோயில் சீரமைக்கப்பெற்று கும்பாபிஷேகம்
நடந்தது. செப்டம்பர் பதினாறாம் தேதி
எங்களது குடும்பத்தின் சார்பில் மண்டல
பூஜை நடந்தது. செப்டம்பர் இருபத்தியொன்றாம் தேதி நாங்கள் ஸ்வாமிஜியைப் பார்க்க
கல்கத்தா கிளம்பும் முன் குலதெய்வத்தின் மண்டல பூஜைப் பிரசாதம் சென்னையில் எங்கள்
வீட்டிற்கு தபால் மூலம் வந்தது. குலதெய்வ பிரஸாதத்துடன் ஸ்வாமி ரகுநாதாநந்தரை
நாங்கள் தரிசித்தோம். ஐ.சி.யூ.வில் அரைநினைவு நிலையில் இருந்த ஸ்வாமிஜியின்
நெற்றியில் பிரஸாத வீபூதியையும் குங்குமத்தையும் என் தந்தை இட்ட போது அவர்
திருவுடல் சிலிர்த்தது. அதனை நேரில் காணும் பாக்கியத்தை நானும் என் தந்தையும் பெற்றோம்.
தான் காக்கும் குலத்தைச் சேர்ந்த ஒரு மஹாபுருஷர் மோக்ஷத்தை அடையவுள்ள தருணத்தில்
குலதெய்வம் தானாகவே தனது ஆசிகளை வழங்கியது என்று தான் எனக்குத் தோன்றுகிறது.
அதற்கு எங்களைக் கருவியாகத் தேர்ந்தெடுத்ததை இன்று எண்ணி மெய்சிலிர்க்கிறது.
தியாகத்தின், சேவையின் மகிமையையை என்னவென்று சொல்வது!
தெய்வமே தேடி வந்து
அருள்புரிந்த மகாத்மாவின் குலத்தில் தோன்றிய நாம் அவரின் நினைவை மறத்தல் கூடாது.
எஞ்சிய வாழ்வில் நாமும் ஸ்வாமி ரகுநாதாநந்தரின் வழி நடத்தல் வேண்டும். இது போல தேசத்திற்காகவும் சமுதாயத்திற்காகவும்
தன்னலமில்லாமல் பணியாற்ற நமது இளைய தலைமுறையினரையும் ஊக்குவிக்க வேண்டும்.
அல்லது, ஸ்வாமி ரகுநாதாநந்தர்
தான் குலதெய்வம் ஶ்ரீரகுபதியா? ரகுநாத என்றாலும் ரகுபதி என்றாலும் ஒன்று தான். (ஸம்ஸ்க்ருதத்தில் நாத, பதி என்ற இரண்டு சொற்களுக்கும் ஒரே பொருள் தான் - தலைவர் - ரகுகுலத்தில் சிறந்தவர். ) தனது பூவுலக லீலையை நமது ரகுபதி ஸ்வாமியின் அம்ஸமான ஸ்வாமி ஶ்ரீரகுநாதாநந்தர்
முடித்து விட்டு அம்ஸியான குலதெய்வம் ஶ்ரீரகுபதியுடன் இணைவதை குறிப்பால் நம்
அனைவருக்கும் உணர்த்தத் தான் தனது ப்ரஸாதத்தை எங்கள் மூலம் அனுப்பி ஒரு சிறு
லீலையை செய்தாரா எங்கள் குலதெய்வம்?
இறைவன் லீலைகளை யார் அறியமுடியும். ஆனால் நமது ஸ்வாமி ரகுநாதாநந்தர், நம்முடனேயே வாழ்ந்த போதும் தெய்வாம்சம் பொருந்தியவர், இறை அவதாரம் என்பது
தெளிவு. ஆக, அவர் வாழ்ந்து காட்டிய தியாகமயமான, சேவையை ப்ரதானமாகக் கொண்ட வழியில் நாமும் வாழவேண்டும். இது தான் இந்த அவதாரத்தின் தாத்பர்யம் என்று தோன்றுகிறது.
தேடிச் சோறுநிதந் தின்று — பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்
வாடித் துன்பமிக உழன்று — பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து — நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல
வேடிக்கை மனிதரைப் போலே — நான்
வீழ்வே னன்றுநினைத் தாயோ?
ஐயந் தீர்ந்துவிடல் வேண்டும் -- புலை
அச்சம் போயொழிதல் வேண்டும் -- பல
பையச் சொல்லுவதிலுங் கென்னே -முன்னைப்
பார்த்தன் கண்ணனிவர் நேரா-என்னை
உய்யக் கொண்டருள வேண்டும்-
அச்சம் போயொழிதல் வேண்டும் -- பல
பையச் சொல்லுவதிலுங் கென்னே -முன்னைப்
பார்த்தன் கண்ணனிவர் நேரா-என்னை
உய்யக் கொண்டருள வேண்டும்-
****************
நல்ல சுத்தாத்மா. அவர் குலத்தில் பிறந்து உம்முடைய பூர்வ ஜன்ம நற்பயன். शुचीनां श्रीमतां गेहे योगभेष्टोभिजायते।।
ReplyDelete