பதிலளிப்பதில் நுட்பங்கள் - ரிஷி ஆருணி நமக்கு வழிகாட்டுகிறார்
பதிலளிப்பதில் நுட்பங்கள் -
ரிஷி ஆருணி நமக்கு வழிகாட்டுகிறார்
முனைவர் ம ஜயராமன்
அறிமுகம்
கடந்த முறை “கேள்வி படுத்திய பாடு” என்று - கேள்வி தொடர்பான உபநிடத கருத்துக்களை பார்த்தோம். இப்போது உபநிடதங்கள், பதிலளிக்கும் விதம் பற்றி என்ன கூறுகின்றன என்பதனை கவனிப்போமா? சாந்தோக்கிய உபநிடதம் சாமவேதத்தின் ஒரு பகுதியாகும். இந்த வேதப் பகுதியின் ஆறாவது அத்தியாயத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடந்த ஒரு உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பதிலளிக்கும் விதம் பற்றி பார்ப்போம்
தந்தையின் கேள்வியும் மகனின் கர்வம் மிகுந்த அறியாமையும்
தந்தை ஆருணி சுற்றுபிரயாணங்களில் ஈடுபட்டதால், தாமதமாக பன்னிரெண்டாவது வயதில் தான் மகனான சுவேதகேதுவை தகுந்த குருவிடம் படிக்க அனுப்புகிறார்.
தனது மகன் படிக்காமல் தற்குறியாக ஆகிவிடக்கூடாது என்பது அவரது கவலை. பன்னிரெண்டாவது வயதில் குருகுலவாசம் செய்யத்துவங்கிய சுவேதகேது பன்னிரெண்டு ஆண்டுகள் குருகுலவாசம் முடிந்து தனது இருபத்தி நான்காவது வயதில் வீடு திரும்புகிறான்.
தாமதமாக கல்வி கற்கச் சென்றதாலோ என்னவோ - கல்வியில் தனக்கு நிகர் யாரும் அல்ல, தானே சிறந்த கல்விமான் என்ற எண்ணத்துடனும், பணிவு என்ற குணம் சிறிதும் இன்றியும், வீடு திரும்புகிறான் சுவேதகேது.
மகனின் இந்த தன்மையை மாற்ற எண்ணி தந்தை ஆருணி சுவேதகேதுவிடம் ஒரு கேள்வி கேட்கிறார் - “மகனே! எதனைப் பற்றி கேட்டால் - அனைத்தும் கேட்டதாக ஆகுமோ, இதுவரை சிந்திக்கப்படாதது அனைத்தும் சிந்திக்கப்பட்டதாக ஆகுமோ, அறியப்படாதது அனைத்தும் அறிந்ததாக ஆகுமோ - அது பற்றி உனது ஆசிரியர்களிடம் கேட்டாயா?” என்கிறார்.
(மனதில் பரம்பொருள் எனும் பதிலை வைத்துக்கொண்டு தந்தை மகனிடம் இந்தக் கேள்வி கேட்கிறார்).
“எனக்கு இந்த கேள்விக்கு பதில் தெரியாது. ஏனெனில் எனது ஆசிரியர்கள் எனக்கு இந்த விஷயம் பற்றி சொல்லிக் கொடுக்கவில்லை. அவர்களுக்கும் அது தெரிந்திருக்க வாய்பில்லை. ஏனெனில் நான் ஒரு சிறந்த மாணவன். சிறந்த மாணவனுக்கே சொல்லிக்கொடுக்கவில்லை என்றால் அவர்களுக்கே தெரியாது என்று தானே அர்த்தம். நீங்களே இது பற்றி (அறிந்தால்) கூறுங்களேன்!” - எனும் விதத்தில் தன்னைப் பற்றிய வரம்புமீறிய அகம்பாவத்துடன் பதிலளித்தான் - சுவேதகேது.
இந்த பதில் தந்தை ஆருணி ஒருவாறு எதிர்பார்த்தது தான். ஞானியான அவரே பரம்பொருள் பற்றி தனது மகனுக்கு உபதேசம் அளிக்கத்துவங்கினார். ஏனெனில் - எல்லா வித்யைகளைக் கற்றாலும் பரம்பொருளை பற்றி அறியாவிட்டால் வாழ்க்கை அர்த்தமற்றதாகி விடும் என்று அவர் உணர்ந்திருந்தார் - என்று தனது உபநிடத உரையில் ஆதிசங்கரர் கூறுகிறார்.
ஞானியான தந்தை - ஆசிரியர் சிகரம்
“எதனை அறிந்தால் அனைத்தும் அறிந்ததும் ஆகுமே அந்தப் பொருள் நீ தான் சுவேதகேது "தத் த்வம் அஸி" (அது நீ தான்) – என்கிறார் ஆருணி.
இதற்கு முதலில் ஓர் உதாரணமளிக்கிறார் -
“மனதுக்கு இனிய சுவேதகேது! தேனீக்கள் பல பூக்களிலிருந்து தங்களது தேன்கூட்டிற்குத் தேனை சேகரித்து வருகின்றன. ஆனால், அவ்விதம் பல ஜாதி பூக்களிலிருந்து சேகரிக்கப்படும் தேன், தேன்கூட்டில் கலந்த பின் பின் எந்தப் பகுதி எந்தப் பூவிலிருந்து வந்தது என்பதனை அறிய முடியுமா? முடியாது அல்லவா! அதே போலத் தான் இரவின் ஆழ்ந்த உறக்கத்தில் நாம் அனைவரும் பரம்பொரும் பொருளில் ஒன்றிவிடுகின்றோம். ஆனால் நாம் அதனை அறிவதில்லை. விடிந்ததும் புத்துணர்வுடனும், பரம்பொருளில் லயித்ததால் ஆனந்தத்துடனும் எழுகின்றோம் அல்லவா!
ஆகவே, சுவேதகேது - அழ்ந்த உறக்கம் பற்றி சிந்தித்தால் நாம் அனைவரும் அன்றாடம் பரம்பொருளிலிருந்து தான் எழுகின்றோம். இரவில் பரம்பொருளில் ஒன்றுகின்றோம் என்பது புரியும். எனவே அடிப்படையில் நாம் அனைவரும் பரம்பொருள் தான் – “தத் த்வம் அஸி” -சுவேதகேது!” என்கிறார் தந்தை.
இதனைக் கேட்ட சுவேதகேது – “தந்தையை! இது பற்றி மீண்டும் தெளிவுபடுத்துங்கள் என்கிறான்”.
இம்முறை மகனுக்கு பதிலளிக்க ஆருணி இன்னொரு வழிமுறையக் கையாள்கிறார்.
“இரவில் ஒரு கட்டி உப்பினை சிறு பானைத் தண்ணீரில் போட்டுவிட்டு காலையில் அந்தக் பானையுடன் என்னிடம் வா” என்கிறார்.
காலையில் சுவேதகேது வருகிறான்.
“இப்போது பானையில் உப்பு தெரிகிறதா?” என்கிறார்.
“இல்லை” என்கிறான் சுவேதகேது.
“சரி! குட தண்ணீரின் மேல் பாகத்தில் இருந்து சிறிது நீரினை அருந்து” என்கிறார். அவனும் அவ்வாறே செய்கிறான்.
“உப்புக்கரிக்கிறது” என்று முகம் சுளிக்கிறான்..
“பானையின் மத்தியிலும், அடியிலும் இருக்கும் நீரினையும் அருந்து” என்கிறார்.
“அவையும் உப்பாகவே இருக்கின்றன” என்கிறான் சுளித்த முகத்துடன்.
“மனதுக்கு இனியவனே ! தண்ணீரில் கலந்த உப்பு போல, கண்ணுக்குப் புலப்படாவிட்டாலும், பஞ்சபூதங்கள் வடிவிலான இந்த உடலில் உணர்வுமயமான ஆன்மா, பரம்பொருள் நீக்கமறக் கலந்துள்ளது. அந்தப் பரம்பொருள் நீ தான் என அறிந்து கொள். “
“மேலும், நேற்று கண்ணுக்குப் புலப்பட்ட உப்பு இன்று கண்ணுக்குப் புலப்படாவிட்டாலும் நாவிற்குப் புலப்படுவது போல, நீ தற்போது சிந்திக்கும் விதத்தில் “நீ தான் பரம் பொருள்” என்று உணரமுடியாவிட்டாலும். வேறு பல விதத்தில்அதனை அறிய வாய்ப்புள்ளது என்பதனைப் புரிந்து கொள். ஆகவே தற்போது புரியவில்லை என்றால் அவ்விஷயம் இல்லை என்று முடிவு கட்டிவிடாதே” என்று பதிலளிக்கிறார் தந்தை.
மீண்டும் சுவேதகேது "தந்தையே மீண்டும் தத் த்வம் அஸி என்பதனைத் தெளிவுபடுத்துங்கள்" என்கிறான்.
மீண்டு இன்னொரு உதாரணம் கொடுக்கிறார் ஆருணி.
இவ்விதம் ஒன்பது முறை சுவேதகேது - "மீண்டும் தெளிவுபடுத்துங்கள்" என்கிறான். தந்தையும் சளைக்காமல் வேறு ஒரு பரிசோதனை, வேறு ஒரு உதாரணம் கொண்டு “தத் த்வம் அஸி” என்பதனைப் புரிய வைக்க முயல்கிறார்.
ஆக கேள்வி என்று தான்- ஆனால் அதற்கு ஒன்பது விதமான பதில்கள்.
ஒவ்வொரு முறை பதில் கூறும் போது மகனை "ஸோம்ய" - "மனதுக்கு இனியவனே" என்று மலர்ந்த முகத்துடன் அழைத்து பதிலளிக்கிறார் தந்தை என்பது கவனிக்கதக்கது.
முடிவுரை
இதிலிருந்து, ஆசிரியர்களாக நாம் அறியும் கருத்து என்ன?
அதாவது, சுவேதகேது போன்ற அதிமேதாவி மாணவர்கள் அன்றும் இருந்தார்கள் - என்பது இதனால் தெரிவிக்க உத்தேசித்த கருத்த அல்ல.
மாறாக, பொறுமையுடனும், இனிமையாகவும், பாட விஷயத்தை புரிய வைக்க புதுப் புது உத்திகளை சளைக்காமல் கையாள வேண்டும் என்பது என்பது தான் இந்த உபநிடத உரையாடல் நமக்கு உணர்த்துவது அல்லவா!
ஆருணி போன்ற சிறந்த ஆசிரியர்களான ரிஷிமுனிவர்களின் வழித்தோன்றல்களான நம்மில் பலருக்கு இந்த குணங்கள் இயற்கையாகவே அமைந்திருக்கும். அதே ரிஷிபரம்பரையில் வந்ததால் இக்குணங்களை இது நாள் வரை கவனிக்காதவர்கள் கூட அவற்றை வளர்த்துக்கொள்வது மிகச் சிரமாக இருக்கப்போவதில்லை.
மேலும், நாம் கவனிக்க வேண்டியது - ரிஷிமுனிகள் என்பவர்கள் காட்டில் தவம் புரிபவர்கள் மட்டுமன்று. தத்தம் பணிகளை தவமாக மேற்கொண்டு விளங்குபவர்களே ரிஷிமுனிவர்கள் ஆகிறார்கள். ஆக, ஆசிரியர் பணியினை ஆருணி போலத் தவமாக மேற்கொண்டால் நாமும் ரிஷிமுனிவர்களே!
(அடுத்த இதழில் இன்னொரு உபநிடத ரிஷியை தரிசிப்போம்!)
Comments
Post a Comment