ஒரு கேள்வி படுத்திய பாடு! (கல்வியியல் தொடர்பான கட்டுரை)
ஒரு கேள்வி படுத்திய பாடு!
முனைவர் ம ஜயராமன்
(வித்யாபாரதியின் - வித்யாவாணி மாத இதழில் (ஜனவரி 2022 ) கல்வி பற்றி - வெளியான என் கட்டுரை
கால-யந்திரத்தில் பயணம்
அரையாண்டு விடுமுறைக் காலம் அல்லவா. கொரோனா ஊரடங்கு தான் இல்லையே! சிறிது சுற்றுப்பயணம் செல்லலாமே!
கால-யந்திரத்தில் பயணம் செய்வோம். சில ஆயிரம் வருடங்கள் பின்னோக்கிச் சென்று ஒரு தபோவனத்தை அடைகிறோம்.
இது சுகேஷ முனிவரின் ஆசிரமம்.
ஆ! அங்கு யார் தேரில் வந்து இறங்குவது?
ஹிரண்யநாபன் எனும் இளைஞனின் தேர் தான் ஆசிரமத்திற்கு வெளியில் வந்து நிற்கிறது.
ஆசிரமத்திற்கு உள்ளே நுழைந்து, சுகேஷ முனிவரை வணங்கி நிற்கும் ஹிரண்யநாபனை நாம் பார்க்கிறோம்.
அவன் கூறுகிறான் - "முனிவரே! பதினாறு கலை புருஷன் (ஆன்மா) பற்றி எனக்கு உபதேசித்து அருளுங்கள்" .
சுகேஷ முனிவர் கூறுகிறார் " ஹிரண்யநாபா! இது பற்றி எனக்குத் தெரியாது."
நம்பிக்கையின்றி அங்கேயே தயங்கி நிற்கிறான் ஹிரண்யநாபன்.
அவனது தயக்கத்தின் காரணத்தை உணர்ந்த சுகேஷ முனிவர் கூறுகிறார் - "எனக்கு நீ கேட்ட தத்துவம் பற்றி உண்மையாகவே தெரியாது. எனக்கு இது பற்றி தெரிந்திருந்தால் கூறாமல் இருந்திருபேனா? தெரிந்ததைக் கூறாமல் இருப்பவர் வேருடன் காய்ந்து போய்விடுவார்"
ஹிரண்யநாபன் வேறு எதுவும் பேசாமல் தேரில் ஏறிச் சென்றுவிடுகிறான்.
இந்த உரையாடலை காலயந்திரத்தின் மூலம் உறையச் செய்துவிட்டு நிகழ்காலத்திற்கு வந்துவிடுவோம். ஆசிரியர்களாக, கல்வியாளர்களாக இருக்கும் நாம் இந்த உரையாடலிருந்து அறிவது என்ன?
உரையாடல் தூண்டும் சிந்தனை...
ஒரு ஆசிரியர் - தனக்குத் தெரியாததைத் தெரியாது என்று தைரியமாகக் கூற வேண்டும். தெரியாததைத் தெரிந்தது போலக் கூற விழைந்தால் மாணவனுக்கு அது தவறான வழிகாட்டுதலாக அமைந்துவிடும் அல்லவா! இந்த வலைதள யுகத்தில் அந்தக் கேள்வி பற்றி மாணவனே சிறிது ஆரய்ந்து பார்த்து ஆசிரியர் கூறியது தவறு என்பதனை அறிந்தால், அவர் மீதுள்ள நம்பிக்கை குலைந்து போகும். இதனால் அந்த ஆசிரியரின் பாடத்தில் மாணவனின் மனம் நிலைக்காது
சொந்த விருப்பு வெறுப்பு காரணாமாக தெரிந்ததைத் தெரியாது என்று கூறுவதும் கூடாது. மாணவன் முறையாகத் தகுதி பெற்றிருப்பின் அவனுக்கு நாம் அறிந்ததை சொல்லித்தர வேண்டும்.
சரி. தெரிந்ததைத் தெரிவிக்காமல் விட்டால் ஆசிரியர் வேருடன் காய்ந்து போய்விடுவார் என்று சுகேஷ முனிவர் கூறியதன் பொருள் என்னவாக இருக்கும் ?
வேர் என்பது ஞானத்தைக் குறிக்கலாம். ஞானத்தைப் பகிர பகிரத் தான் அது வளரும் - கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க எடுக்க தண்ணீர் ஊறுவது போல!
உயிர்ப்புடன் இருக்கும் வேர் முளைத்து, இலைவிட்டு, பூவாகிக் காயாகிக் கனியாகிறது. தான் அறிந்ததைத் தெரிவிக்காமல் விட்டால், அந்த அறிவு தன்னுடனேயே இருந்து மக்கி விடலாம். இது வேர் காய்ந்து போவது போல. மாணவன் துளிர்க்க ஆசிரியர் என்னும் வேர் உயிர்ப்புடன் இருப்பது அவசியமல்லவா!
சரி. தெரியாததைத் தெரியாது என்று சுகேஷ முனிவரைப் - போல தைரியமாகக் கூற வேண்டும். அதன் பின் கையைக் கட்டிக்கொண்டு அமர்ந்து விடலாமா? தெரியாது என்று கூறிய சுகேஷ முனிவர் - அதன் பின் என்ன செய்தார் ?
மீண்டும் கற்பனை குதிரையை - இல்லை இல்லை - காலயந்திரத்தைத் தட்டிவிடுவோம்.
பயணம் தொடர்கிறது...
மீண்டும் சுகேஷ முனிவரின் ஆசிரமம் வந்தடைகின்றோம்.
அட இது என்ன! சுகேஷ முனிவர் எங்கோ புறப்படுகிறாரே! அது என்ன அவரின் வதனத்தில் அப்படி ஒரு வேதனை. ஓ! மன வேதனையைக் காட்டும் முக வாட்டம் !
அப்படி என்ன வேதனை ? தான் பதிலளிக்க முடியாமல் அறிவில் தைத்த கேள்வி எனும் முள் - சுகேஷாவை வேதனைப் படுதியது போலும். (இவ்விதம் ஆதிசங்கரர் பிரச்ன உபநிடத உரையில் சுகேஷ முனிவரின் மனநிலையை விவரித்துள்ளார் )
கேள்விக்கு பதில் தேடி பழுத்த ஞானியான முனிவர் பிப்பலாதரைத் தேடிச் செல்கிறார் சுகேஷ முனிவர் . வழியில் அவருடன் இன்னும் ஐந்து பேர் சேர்ந்து கொள்கிறார்கள் - பல்வேறு சந்தேகங்கள் தெளிய. நாமும் அவர் அறியாமல், அவர் அறிந்ததை அறிய அவரைப் பின் தொடர்ந்து செல்கிறோம்,
அவர்கள் சந்தேகத்தை உடனடியாக தீர்த்து வைத்தாரா முனிவர் பிப்பலாதர்? அது தான் இல்லை.
"நீங்கள் ஆறு பேரும் ஒரு வருடம் தவமியற்றிவிட்டு மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டு வாருங்கள். பின்னர் உங்கள் சந்தேகம் அனைத்தையும் தீர்த்து வைக்கிறேன்" என்கிறார் முனிவர் பிப்பலாதர்.
கேள்விக்கு பதில் பெற ஒரு வருடம் தவமியற்ற வேண்டுமா? என்று சுகேஷ முனிவரும் அவரது சகாக்களும் மலைத்துப் போனார்களா? துவண்டு போனார்களா? ஒரு வருடத்திற்குப் பின் திரும்பி வந்தார்களா?
நம்மிடம் தான் கால யந்திரம் இருக்கிறதே. சிறிது இயக்கிப் பார்ப்போம்!
ஒருவருடம் தவமியற்றி அவர்கள் அறுவரும் திரும்பி வந்து அற்புதமான கேள்விகளைக் கேட்டனர்.
ஞானப்பழமான பிப்பலாதரும் அபாரமான பதில்களை அளித்தார். சுகேஷ முனிவரின் அறிவில் தைத்த முள் அகற்றப்பட்டது.
(இது தான் பிரச்ன உபநிடதத்தின் கதை. இதற்கு ஆதிசங்கரர் முதலிய ஆச்சாரியர்கள் உரை எழுதியுள்ளனர்)
"ஒரு கேள்வி படுத்திய பாட்டையும் அதன் விளைவையும் பாரேன்" என்று நாம் பரஸ்பரம் பேசிக்கொண்டு நிகழ்காலத்திற்குத் திரும்புவதற்காக கால-யந்திரத்தில் ஏறப்போகும் போது, ஒரு பழமையான மரத்தின் வேர் தடுக்கி விழுந்துவிடுகிறோம்.
சுதாரித்துக்கொண்டு எழுந்து பாரத்தால் - மேலே கட்டில், கீழே நாம்.
இது கனவா? இது
சாத்தியமா?
(மீண்டு ஒரு உபநிடத சிந்தனையுடன் அடுத்த இதழில் சிந்திப்போம்! )
Comments
Post a Comment