என் ருக்மணி பாட்டியும் - சைதன்யருடைய தாய் சசிதேவியும்
அன்னையர் தின பதிவு
என்னுடைய தந்தையாருடைய பெரிய அண்ணா 1950 களில் ராமகிருஷ்ணமடத்தில் துறவியாவதற்காக சேர்ந்தார். எனது தாத்தா, (பூர்வாசிரம) பெரியப்பாவை வீட்டிற்கு திரும்ப அழைத்துவர பல முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் அசாத்தியாமான பரிபக்குவம் கொண்டிருந்த என் பாட்டியோ - எனது அப்பாவிடம் ஒரு தேங்காயைக் கொடுத்து " போ! உனது அண்ணன் எந்த குழப்பமும் இன்றி துறவு வாழ்வில் நல்லபடியாக ஈடுபட வேண்டும் என்று ப்ரார்த்தனை செய்து கொண்டு இந்த தேங்காயை பிள்ளையார் கோவிலில் உடைத்து விட்டு வா என்றாராம்" சைதன்யமகாப்பிரபுவின் தாயார் பற்றி படிக்கும் போது எனது பாட்டியை பற்றி என் அப்பா கூறிய இந்த செய்தி நினைவுக்கு வந்தது.
சைதன்ய மஹாப்ரபுவின் தாயார் சசி தேவி.
சைதன்யர் ஸந்நியாஸம் வாங்கிக் கொள்வதற்காக 1510 ஆம் ஆண்டு ஒருநாள் இரவில் யாரும் அறியாமல் வீட்டைவிட்டுச் சென்றார். பல மைல் தூரம் நடந்து வேறு ஒரு கிராமத்திற்குச் சென்றார். மிகவும் மன்றாடி அடுத்தநாள் கேசவ பாரதியிடம் ஸந்நியாஸம் பெற்றார். அங்கிருந்து ப்ருந்தாவனம் நோக்கி பயணித்தார். அவரது சீடர்கள் பலர் அவரைப் பின்தொடர்ந்து சென்று இறைநினைவில் சென்றுகொண்டிருந்த அவரை வழிமாற்றி ப்ருந்தாவனத்திற்கு பதிலாக சாந்திபுரத்திற்கு இட்டுச்சொன்றுவிட்டனர்.
அங்கே முன்கூட்டியே மேலும் பலரும் வந்திருந்தனர், அவரது தாயார் சசிதேவியும் கூட வந்திருந்தார்.
சைதன்யரைக் கண்டதும், அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் பக்திபாவம் மேலிட்டது. சைதன்யரும் பக்திபரவசத்தில் திளைத்தார். அங்கே எல்லோரும் கிருஷ்ணபக்தியில் மூழ்கி ஆடிப்பாடினர். பத்துநாட்கள் கடந்தன.
சைதன்யர் அவரது அன்னை அங்கிருந்ததை கவனித்தார். தனது சீடர்கள் மூலம் ஒரு தகவல் அனுப்பினார் தனது அன்னைக்கு - "அம்மா! தாங்கள் அனுமதியளித்தால் நான் ஸந்நியாஸத்தில் தொடர்வேன். இல்லையேல் மறுபடியும் தங்களுடன் வீடுதிரும்பிவிடுவேன்" என்று.
பத்து நாட்களாக தனது மகனால் அங்கு நிலவிய பக்திபெருக்கையும், அங்கு கூடியிருந்த மக்களில் ஏற்பட்ட பரமானந்தத்தையும் கண்ட சுயநலமற்ற அந்த தியாகத்தாய் முழுமனதுடன் சைதன்யரை ஸந்நியாஸம் மேற்கொள்ள அனுமதித்தார்.
வயதான காலத்தில் தன்னை யார் கவனித்துக்கொள்வார்கள் என்பது போன்ற கவலைகள் சிறிதுமின்றி, தன்னலம் கருதாதமல் சமுதாய மேன்மைக்காக தனது மகனை அர்பணித்தார் அன்னை சசிதேவி. ஸந்நியாஸம் மேற்கொண்ட சைதன்யர் பாரத தேசமெங்கும் சுற்றுபிரயாணம் செய்து பக்திப் பேரலையையே எழுப்பினார். கொடிய மிருகங்களையும், ஈவிரக்கமற்ற இதயம் கொண்டவர்களையும் கூட கிருஷ்ணபக்தியில் ஈடுபடுத்தி அவர்கள் மேன்மைக்கு வழிவகுத்தார்.
இப்படி சைதன்யர் கவலையின்றி தனது பணியினை மேற்கொள்ளவும் தொடரவும் காரணம் அவர் அன்னையின் தன்னலமற்ற ஆசீர்வாதம்.
சங்கரர், சைதன்யர், விவேகானந்தர், போன்ற துறவிகள் தேசமெங்கும் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த வழிகோலியவர்கள் தியாக உள்ளம் கொண்ட அவர்களது அன்னையர்கள்.
இப்படிப்பட்ட அன்னையர்கள் நமது தேசத்தில் இருந்ததால்/இருப்பதால் தான், நமது தர்மம், சங்கடத்தில் மிக ஆழ்ந்து சமுதாயத்தில் நம்பிக்கையிழந்த தன்மை ஏற்படும் போது, அவ்வப்போது ஒரு தவசீலர் நம்மில் உதித்து தனது தாயின் ஆசியுடன் மறுமலர்ச்சி ஏற்படுத்துகின்றார், தர்மம் தழைக்கச் செய்கின்றார்.
இவ்விதம் சநாதன தர்மம் நிலைபெற தியாகம் செய்த உன்னத அனையர் அனைவரையும் (என் பாட்டி உட்பட) அன்னையர் தினத்தில் உளமாற வணங்குகிறேன். - ம.ஜெயராமன்
Very nice article. Thanks for sharing
ReplyDeleteSacrifices and unconditional love of a mother, beautiful article.
ReplyDeleteTrue, it is due to such unconditional love of Mothers that the world is still a beautiful place to live in! Thanks for sharing.
ReplyDelete