தேவை தேரூழியம்! - கபாலீச்வரர் தேர்



நேற்று (28/03/2018) மயிலை அருள்மிகு கபாலீச்வரர் தேரோட்டம்.  மிகக் கோலாகலமாக நடைபெற்றது. இது பற்றி ஒரு விஷயம் மனதில் பட்டது.  பகிர்கிறேன்.

என் பள்ளி பருவத்திலிருந்தே இந்த உற்சவத்தில் கலந்து கொண்டுவருகிறேன் (1996). இம்முறை தேரோட்டத்தின் போது அவ்வளவு கூட்டமில்லை என்று தோன்றியது. மாடவீதிகளில் மக்கள் கூட்டம் இருந்தது. ஆனால், மந்தைவெளி போன்ற அக்கம்பக்க பகுதிகளில் தேரோட்டத்தினைப் பற்றி அவ்வளவு ஆர்வமும், உற்சாகமும் இல்லையோ என்று தோன்றியது. (என் கணிப்பு தவறாக இருக்கலாம்) 




உற்சவத்தில் உற்சாகக் குறைவு?
மக்கள் தங்களது அன்றாட அலுவல்களில் என்றும் போல தூங்கி வழிந்ததாகத் தோன்றியது. பள்ளிச் சிறுவர்கள் முதுகில் பொதி மூட்டையைச் சுமந்து கொண்டு வேண்டா வெறுப்பாக பள்ளி செல்லும் அன்றாட காட்சி தேர்த்திருவிழா அன்றைக்கும் காணமுடிந்தது. அன்றாட அலுவல்களில் சிக்கிச் சுழலும் அண்டை அயலாரையும் காணமுடிந்தது.
  
“ஊர்கூடித் தேரிழுக்க வேண்டும்” என்றெல்லாம் பழமொழி உள்ளது. ஊர்த்திருவிழாவின் போது ஊரே   திரண்டு கொண்டாட வேண்டாமா? இது பக்தி, புண்ணியம் இவற்றிற்காக மட்டுமல்ல, சமுதாயம் ஒன்றாகத் திரளவதற்கான ஒரு வாய்ப்பும் கூட.  வாழ்கையின் கவலைகளை மறந்து உற்சாகம் கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமும் கூட.

திருவிழாவின் திருவினை

“கபாலி! கபாலி! கபாலி!” என்று கோஷித்துக்கொண்டு தேரை இழுக்கும் போது, அதனைப் பார்க்கும் போது,  எங்கிருந்தோ உற்சாக நம்மையும் தொற்றிக்கொள்கிறது. 

உளவியல் ரீதியாகக் கூட சமுதாயத்திற்கே  தெம்பு தரும் ஒரு தருணம் அல்லவா தேர்த் திருவிழா என்பது?  எல்லா வேற்றுமைகளையும் மறந்து ஒன்றிணைவதற்கான வாய்ப்பும் கூட.

பள்ளிகூடத்தில் கற்றுக்கொள்வதை விட, தேர்த்திருவிழா அன்று மொத்த சமுதாயத்தையும் ஒன்றாக பார்க்கும் போது மாணவர்கள் எத்தனையோ புது விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

உயர்ந்த நோக்கத்திற்காகத் திரண்ட மொத்த சமுதாயத்தையும் ஒன்றாக காண்பதே ஒரு தெய்வ தரிசனம் ! "ஸஹஸ்ரசீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்" -  ஆயிரம் தலைகள், ஆயிரம் கண்கள், ஆயிரம் கால்கள் கொண்ட பரமனைக் கண்டு கொண்டாட இது ஒரு வாய்ப்பு!
    
உணவும், தண்ணீரும், நீர்மோரும் தாராளமாக பிறருக்கு வாரிவழங்கும், பகிர்ந்து கொள்ளும் தருணம் அல்லவா இது. மாணவர்கள் பகிர்ந்துண்ணுதல் எனும் மேன்மையான கருத்தை அனுபவப்பூர்வமாக அறிய இது அரிய சந்தர்ப்பம். மேலும், கூச்சம் தவிர்த்து பலவிதமான பந்தல்களுக்குச் சென்று உரிமையுடன் தின்பண்டங்களைக் கேட்டு பெற்று,  மற்றவர்களுடன் கலந்து பழகுவதற்கும் இது ஒரு அற்புதமான சந்தர்ப்பம்!        

பிறருக்கு எந்தெந்த விதத்தில் சேவை செய்ய முடியும் என்பதை யோசித்து யோசித்து செயல்படுத்த தேர்த்திருவிழா வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறது. தேரை இழுக்கும் இளைஞர்கள் வெயிலில் வாடாமல் இருக்கும் வண்ணம் அவர்களுக்கு பனை விசிறிகளால் வீசுவதற்கு ஒரு கூட்டமே அவர்களைச் சுற்றி இருக்கும்.  இதனால் விசிறி வியாபாரமும் அமோகமாக இருக்கும். மாடிவீடுகளிலிருந்து தேர் இழுப்பவர்களின் சிரமம் குறைய அவர்கள் மீது தண்ணீர் தெளிக்கப்படும்.  அவர்கள் தாகம் தணிக்க தண்ணீர் பைகள் வீசப்படும். இந்த முறை காவல்துறையினரும் கூட, பந்தோபஸ்து அளிப்பது, திருவிழாவிற்கு கூடியிருக்கும் தாய்மார்களை எச்சரிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் அணிந்திருக்கும் நகைகளைப்  பாதுகாக்க தாய்மார்களுக்கு ’ஸேப்டி பின்’ விநியோகம் செய்தார்கள்.

இவ்விதமாக, இறைவனின் தொண்டர்களுக்கும் அடியவர்களாக, தொண்டர்கள் அடிப்பொடியாக இருத்தல்  போன்ற இலக்கியங்களில் கேட்கப்படும் கருத்துக்களை செயல்வடிவத்தில் காணலாம் இங்கே.  மாணவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் கூட இது போல பல விஷயங்களை கவனித்து கற்றுக்கொள்ளலாம்.

மேலும், இறைவனே நம்மைக் காண கோயிலிலிருந்து  வெளியே புறப்பட்டு வருகிறார். அவரைக் காண நாமும் நம்முடைய வீடுகளிலிருந்து புறப்பட்டு வரவேண்டாமா! கர்மபூமியான இந்த பாரத நாட்டில், நாம் பிறப்பு-இறப்பு- எனும் ஸம்ஸாரத் தளையை அறுத்து மோக்ஷம் அடைய வேண்டும் என்பதற்காகவே பிறப்பெடுத்திருக்கிறோம்.  இதற்கு,  தேர்திருவிழா அன்று அன்றாட அலுவல்கள் எனும் தளையை   அறுத்து, இறைவனையும் அவனது அடியார்களையும் தரிசித்தல் அவர்கள் சந்நிதியை அடைதல் என்பதனை முதல் படியாக  செய்து பார்க்கலாம்.
ஆலயவிழாக்களும் அறநிலையத்துறையும்
இப்படி பல விதங்களில் பயனளிக்கும், மேன்மையான இந்தத் தேர்த்திருவிழாவைப் பற்றி அறநிலயத்துறை சரியான விதத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப் பட வேண்டும். அரசியல் தலைவர்களின் பெயர்களைப் பெரிய எழுத்தில் போடாமல் சுவரொட்டிகள்  அச்சிட்டு நகரெங்கும் தேர்த்திருவிழா பற்றி மக்கள் தகவல் அறியச் செய்யலாம்.   (அண்மையில் கேரளம் (கொச்சி, திருபுணித்துரா) சென்றிருந்த போது, அரசின் தேவஸ்வம் போர்டு சோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோயில் உற்சவம் பற்றி சுவரொட்டிகள் மூலம் கொச்சி நகரத்தில் மக்களுக்கு தகவல் அறிவித்ததைக் கண்டேன்) திருவிழாவிற்கு முன் ஊடங்களில் அரசே இது பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும்.  "மதசார்பற்ற" அரசியலமைப்புக் கொண்ட இந்த நாட்டில் அரசின் அறநியத்துறை கோயில்களை நிர்வகிக்கும் வரையில்,  அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை அனுபவிக்கும்  வரையில், அரசே அந்த கோயில் திருவிழாக்களுக்கு விளம்பரம் செய்வதும், அதன் மகத்துவம் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பதும் எந்த விதத்திலும் மதசார்பின்மைக்கு பங்கம் விளைவித்து விடாது.  இதனைச் செய்ய வேண்டியது கபாலீச்வரர் கோயில் தேர்திருவிழாவுக்கு மட்டுமல்ல, இது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களின் முக்கிய உற்சவங்களுக்கும் இது  பொருந்தும்.
தேரூழியம்
இது அரசின் பணிமட்டுமல்ல, இதில் மக்களின் பங்கும் உள்ளது.  தமிழ் லெக்ஸிகனில் (. 2062) தேரூழியம் என்று ஒரு பதம் உள்ளது. அதன் பொருள் -     கோயிற்றேரை இழுப்பதற்குக் கிராமவாரியாக ஆள்களைத் திரட்டி அனுப்பும் ஊழியம்.  இந்த காலகட்டத்தில்,  தேரை இழுப்பதற்காக மட்டுமல்ல, தேர்த்திருவிழாவைக் காண, மக்களை வரவழைக்க ஊர் ஊராக தேர் ஊழியம் துவங்க வேண்டும் எனத் தோன்றுகிறது. மக்களே தங்களுக்குள் குழுக்களை அமைத்துக் கொண்டு, சென்னையின் பல பகுதிகளுக்குச் சென்று தேர்த்திருவிழா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆன்மிக அமைப்புகளும் தன்னார்வ அமைப்புகளும் கூட இதற்கு உதவலாம். இப்படிப்பட்ட தேரூழியத்தினாலும் புண்ணியம் தான் என்பது கூறவும் வேண்டுமா.

நிறைவாக
ராமாயணத்தில் ராமனைத் தன்னுடன் அனுப்ப விச்வாமித்ரர் கேட்கும் போது தசரதர் மறுப்பார். அப்போது குல குருவான வசிஷ்டர் குறுக்கிட்டுக் கூறுவார் - "தவ புத்ர ஹிதார்த்தாய த்வாம் உபேத்ய அபியாசதே" (ராமாயணம்
1.21.21) தசரதா! உன்னுடைய மகனின் நலனுக்காக உன்னிடம் இறைஞ்சுகிறார் இந்தப் பெரியவர் (விச்வாமித்ரர்) என்று.

சமுதாயத்தின் ஒட்டுமொத்த நலனுக்காக மக்களை தேர்த்திருவிழாவிற்கு அவர்களிடம் இறைஞ்சியாவது அழைத்து வர தேரூழித்தை மேற்கொண்டு நாமும் விச்வாமித்ரர்களாக ஆக வேண்டும். ஆம்! விச்வாமிதர்கள் - அனைவரின் நலனைப் பற்றிய அக்கரை கொண்டவர்கள் (விச்வ - அனைவர், மிதரர் - நண்பர்).   

Comments

  1. Oru ullarndha sindanai padivu.!!!
    Viswanathan.

    ReplyDelete
  2. Very deep and thoughtful.. informative.Beautiful post. Thanks for sharing!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

2023 – Academics – in Nutshell

विश्वसंस्कृतसम्मेलने (WSC) संस्कृतविदुषां Hooliganism - यन्मम प्रत्यक्षं तत् भवतां समक्षम्।